நவம்பர் 27 – குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம்–காட்பாடி சாலையில், தலைமை தபால் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா சுமோ வாகனத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அரசு சொந்தமான டாடா சுமோவில் திடீரென கரும்புகை எழுந்து, சில நிமிடங்களில் தீ பெரிதாக பரவியது. இதை கண்டு அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் பெற்ற தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் தீ முழுவதும் பரவி, டாடா சுமோ எலும்புக்கூடாக எரிந்து சேதமடைந்தது. பாதுகாப்பு கருதி அலுவலக மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு துறைக்கு சொந்தமான வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
