Thu. Aug 21st, 2025


🔴 தெரு நாய் ஒழிப்பு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ், பாஜக எதிர்ப்பு…?

வரலாறு, சர்வதேச ஒப்பீடு, அரசியல் & பொதுமக்கள் பார்வை:

டெல்லி, ஆக. 12 – டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தெரு நாய்களை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் 8 வாரங்களில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, நாட்டில் விலங்கு நலக் குழுக்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் பொதுமக்களிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


🏛 உச்சநீதிமன்ற உத்தரவு – என்ன சொல்கிறது?

சமீபத்தில் டெல்லியில் நாய் தாக்குதலில் ஒரு சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,

“மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். மாநிலங்கள் 8 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்”
என உத்தரவிட்டது.

இதன்படி, மாநிலங்களுக்கு பின்வரும் பணிகள் உத்தரவிடப்பட்டுள்ளன:

தெரு நாய்களை பிடித்து அகற்றுதல்

பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள்

மாநில வாரியாக கணக்கெடுப்பு அறிக்கை

🗣 காங்கிரஸ் – “மனிதாபிமானத்திற்கு எதிரானது”

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில்:

“இந்த உத்தரவு மனிதாபிமான மற்றும் அறிவியல் அடிப்படையிலான கொள்கைகளுக்கு பின்னடைவு. தெரு நாய்களை முழுமையாக அகற்றுவது கொடூரமானது.
காப்பகங்கள், கருத்தடை, தடுப்பூசி, சமூக பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் பொதுப் பாதுகாப்பும் விலங்கு நலனும் ஒருங்கே பெறலாம்” என்று குறிப்பிட்டார்.


🐾 பாஜக முன்னாள் எம்.பி. மேனகா காந்தி – “நடைமுறையில் சாத்தியமில்லை”

விலங்கு நல ஆர்வலராக விளங்கும் மேனகா காந்தி:

“டெல்லியில் லட்சக்கணக்கான தெரு நாய்கள் உள்ளன. அனைத்து வசதிகளுடன் காப்பகம் அமைக்க ரூ.15,000 கோடி தேவைப்படும்.
அவற்றுக்கு சாப்பாடு போட வாரம் ரூ.5 கோடி தேவைப்படும். இது நடைமுறையில் சாத்தியமா?
சமீபத்தில் ‘நாய் கடித்து சிறுமி உயிரிழந்தது’ என்ற போலிச் செய்தியை வைத்து உச்சநீதிமன்றம் கோபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெருவிலிருந்து நாய்களை அகற்றினால், அடுத்தது குரங்குகள் வரும். அப்போது என்ன செய்வீர்கள்?”
என்று கேள்வி எழுப்பினார்.


📊 டெல்லி தெரு நாய் கணக்குகள்

2023 கணக்கெடுப்பின் படி, டெல்லியில் 8 லட்சம் தெருநாய்கள் உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் 2.4 லட்சம் நாய் கடிதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நகராட்சிகள் ஆண்டுக்கு சுமார் ரூ.80 கோடி செலவு செய்து வருகின்றன – பெரும்பாலும் கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களுக்கு.

👥 பொதுமக்கள் எதிர்வினை:

சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் சிலர்;
“வெறி நாய்கள் சுத்தும் இடங்களில் இவர்கள் நடந்து போயிருந்தால் தெரியும். காரில் போகுபவர்களுக்கு நடந்து போகும் மக்களின் பிரச்சனை என்ன தெரியுமா?”

மற்றொரு தரப்பு;
“நாய் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்புக்கு உடனடி நடவடிக்கை தேவை”
என்று வலியுறுத்துகின்றனர்.

📜 வரலாறு – இந்தியாவில் தெரு நாய் பிரச்சனை

2001 – மத்திய அரசு Animal Birth Control (Dogs) Rules விதிகளை கொண்டு வந்து, நாய்களை கொல்லாமல் கருத்தடை, தடுப்பூசி மற்றும் மீண்டும் விடும் (CNVR) முறையை நடைமுறைப்படுத்தியது.

2000கள் முதல் – சில நகரங்களில் எண்ணிக்கை குறைந்தது; ஆனால் கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் திட்டம் பலவீனமாக இருந்தது.

சவால்கள் – போதிய நிதி இல்லாமை, காப்பக வசதிகள் குறைவு, விலங்கு நல சட்ட அமலாக்கம் குறைவு.

🌏 சர்வதேச ஒப்பீடு:

சிங்கப்பூர்:

தெருநாய்கள், தெருப்பூனைகள் இல்லாத நாடு. கடுமையான பதிவு முறை, உரிமையாளர் பொறுப்பு, உயிரியல் கட்டுப்பாட்டு திட்டம்.


ஆஸ்திரேலியா:

சட்ட விரோதமாக விலங்குகளை கைவிட்டால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை.


ருமேனியா:

2013-இல் அதிக நாய் தாக்குதல்களுக்கு பிறகு, தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் வைக்க, 14 நாட்களில் தத்தெடுப்பாளர்கள் இல்லாவிட்டால் உயிர் நீக்கும் சட்டம் அமலுக்கு வந்தது.


இலங்கை – இந்தியா மாதிரி CNVR திட்டம்;

ஆனால் அரசியல் நிலைப்பாடு மற்றும் நிதி சவால்கள் காரணமாக வெற்றிகரமாக செயல்படவில்லை.

🎈நாய்க்கடி சம்பவங்கள்… தமிழ்நாட்டில் நாய்க்கடி சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கும் நிலைமையாக உள்ளது. இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. 2022-ல் 21,89,909 சம்பவங்கள் பதிவாகியிருந்தன, இது 2023-ல் 30,52,521 ஆகவும், 2024-ல் 37,15,713 ஆகவும் அதிகரித்துள்ளது. மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலேயே 4,29,664 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

📌மாநில வாரியாக பார்த்தால், 2025 பிப்ரவரி வரையிலான புள்ளிவிவரங்களின்படி மகாராஷ்ட்ரா மாநிலம் 56,538 சம்பவங்களுடன் முதலிடத்தில் உள்ளது. குஜராத் 53,942 சம்பவங்களுடன் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு 48,931 சம்பவங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. கர்நாடகா 39,437 சம்பவங்களுடனும், ஒடிசா 24,478 சம்பவங்களுடனும் அடுத்த இடங்களில் உள்ளன.

📌இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2025-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 3.67 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாய்க்கடி என்பது ரேபிஸ் போன்ற உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பதால், இந்த பிரச்சனையை முழு தீவிரத்துடன் எடுத்துக்கொள்வது அவசியம்.



📌 முடிவு

தெரு நாய் பிரச்சனைக்கு தீர்வு காண பொதுப் பாதுகாப்பும், விலங்கு நலனும் சமநிலைப்படுத்தும் கொள்கை தேவைப்படுகிறது.


ஒரு பக்கம் – மனித உயிர் பாதுகாப்பு;

மறுபக்கம் – உயிரின நலன்.


உச்சநீதிமன்ற உத்தரவு உடனடி நடவடிக்கைக்கான அழுத்தத்தை ஏற்படுத்தினாலும், நடைமுறை, நிதி, மனிதாபிமான சவால்கள் அரசுகளின் முன் நிற்கின்றன.



சிறப்பு பகுப்பாய்வு:
செய்தி & ஆய்வு தொகுப்பு:

Shaikh Mohideen

இணை ஆசிரியர்

Tamilnadu Today Media

 

By TN NEWS