Fri. Nov 21st, 2025

நடுரோட்டில் நெஞ்சுவலியால் நிலைகுலைந்த ஓட்டுநர் – துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தலைமை காவலர்.

ஜூலை 28 ஆம் தேதி காலை 10 மணி அளவில், சென்னை சேத்துப்பட்டு போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் G7 போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் இரா. மணிவண்ணன்.

அந்நேரத்தில், சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தபோதும், முதல் வரிசையில் இருந்த கார் புறப்படாமல் இருந்தது. இதை கவனித்த தலைமை காவலர் இரா. மணிவண்ணன், வாகனத்தின் அருகே சென்று பார்த்தபோது, வாகன ஓட்டுநர் நெஞ்சுவலியால் துடித்து நிலைகுலைந்து கிடந்தது தெரியவந்தது.

விபரீதத்தை உணர்ந்த அவர், உடனடியாக காரின் கதவைத் திறந்து, ஓட்டுநரின் சீட் பெல்டை கழற்றி, அருகிலிருந்த இருக்கையில் அமர வைத்து, தானே வாகனத்தை இயக்கி அருகிலுள்ள பெதனி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு ஓட்டுநர் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் நிலைமை சீராகி, காவலர் மீண்டும் பணிக்கு திரும்பினார்.

விபரீதத்தை தவிர்த்து உயிரைக் காப்பாற்றிய தலைமை காவலர் இரா. மணிவண்ணனுக்கும், உறுதுணையாக இருந்த காவல் ஆய்வாளருக்கும், அங்கு இருந்த வாகன ஓட்டிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

துணை ஆசிரியர் – ஆர். சுதாகர்

By TN NEWS