Fri. Nov 21st, 2025

களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் குப்பை மாசு – அதிகாரிகளின் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் ஆபத்து!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ராமநதி அணை பகுதி, களக்காடு–முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட முக்கியமான சுற்றுச்சூழல் வளமிக்க இடமாகும்.

ஆனால், அண்மைக்காலமாக பொதுமக்கள் மற்றும் மதுபிரியர்கள் இப்பகுதியில் வீசிச்சென்ற பாட்டில்கள் மற்றும் பல்வேறு குப்பைகளை வீசி விட்டு வருகின்றனர். இதனால் புலிகள் காப்பகத்திற்குள் குப்பை மாசு பரவி, வனவிலங்குகளின் பாதுகாப்புக்கும், இயற்கையின் சீரழிவுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பொது இடங்களில் இவ்வாறு குப்பைகள் வீசும் கும்பல்களுக்கு எதிராக வனத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கேள்விக்குறியாக உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை இணைந்து துரித நடவடிக்கை எடுத்தால்தான் ராமநதி அணை மேற்பகுதியின் இயற்கையை காப்பாற்ற முடியும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பை அதிகரித்து, பொது மக்களுக்கு தண்டனையும், விழிப்புணர்வும் அளிப்பார்களா என்பது கவனிக்கத்தக்கது.

– ஆலங்குளம் தாலுகா செய்தியாளர்: மணிகண்டன்

 

By TN NEWS