திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி அரசு ஒப்பந்ததாரரும், திமுக பிரமுகருமான முருகன், மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் நிர்வாகக் குழுவின் கணக்கு விவகாரங்களை கவனித்து வந்தார்.
கடந்த வாரம், ஒரு கும்பல் முருகனை காரில் கடத்திச் சென்று, ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கோரி மிரட்டியது. போலீசார் அந்த கும்பலைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், நத்தம் சாணார்பட்டி அருகே ஜோத்தாம்பட்டியில், காரிலேயே முருகனை கொடூரமாகக் கொலை செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் குமரேசன், நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் வீரபத்திரன், சரவணகுமார், சங்கர், ராஜா, ஷேக்பரீத், விஜய், அசோக், விஜய்பாண்டி என 8 பேர் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
போலீசார் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
– சரவணகுமார், திருப்பூர் மாவட்ட செய்தியாளர்