பாஜகவையும் கூட்டணி கட்சிகளையும் தோற்கடித்து எஸ்டிபிஐ இடம் பெரும் கூட்டணியை வெற்றியடைய களப்பணியாற்றுங்கள் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் பேச்சு..!
தென்காசி மாவட்ட SDPI கட்சியின் சார்பில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தென்காசியில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் முகம்மது நைனார் தலைமை தாங்கினார்.மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஷேக்முகம்மது ஒலி வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் யாசர்கான், பரக்கத் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் கலந்து கொண்டு எதிர்வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். மேலும் அவர் பேசுகையில் ” தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை என்பதை தெரிந்து கொண்டு அதிமுகவின் தோளில் சவாரி செய்து வெற்றியை அடைந்து விடலாம் என பகல் கனவு காண்கின்றது. இயல்பாகவே தமிழக மண் என்பது திராவிட சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட, சமூக நீதியை அடிப்படையாக கொண்ட சமூக, மத நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்கும் மண். இங்குள்ள மக்களை மதரீதியாக, சமூக ரீதியாக பிளவுபடுத்தி ஆட்சியில் அமர்ந்து விடலாம் என எண்ணிக்கொண்டிருக்கும் பாஜகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் தோல்வியடையச்செய்வதோடு, எஸ்டிபிஐ கட்சி இடம்பெறுகின்ற கூட்டணியை வெற்றியடைச்செய்ய அனைத்து பொறுப்பாளர்களும் கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் ” என்பதை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் -1
தென்காசி மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகம் சுமார் 11.11 ஏக்கர் பரப்பளவில் 119 கோடி செலவில் ஆறு மாடிகளுடன் கட்டப்பட்டு பணிகள் முழுவதுமாக முடிந்து தற்போது வரை திறக்கப்படாமல் கட்டிடம் பாழடையும் நிலையில் உள்ளது. பொதுவாகவே அரசு சார்ந்த கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்பே சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதிகள் பின்பற்றப்படாமல் முழுமையாக கட்டுமானம் முடிந்த பிறகே சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகளின் மெத்தனபோக்கினால் தற்போது வரை புதிய ஆட்சியர் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பயனற்று கிடக்கின்றது. ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உடண்டியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் -2
உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றர். இப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய பொழுதுபோக்கு அம்சங்கள் , நவீன கார்பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக பேரூராட்சிக்கு சொந்தமான விஸ்வநாதராவ் பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான உள்ளது. இப்பூங்காவில் சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள் முற்றிலுமாக சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இது சம்மந்தமாக பலமுறை கோரிக்கை வைத்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும் குற்றாலத்தின் அடிப்படை கட்டமைப்புகளை சீரமைக்க கடந்த ஆண்டு 11.34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டாலும் விஸ்வநாத ராவ் பூங்காவில் எவ்வித மேம்பாட்டு பணிகளும் நடைபெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆகவே சுற்றுலா மேம்பாட்டு கழகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து புதிய விளையாட்டு உபகரணகளுடன் விஸ்வநாதராவ் பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் -3
தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சிக்கு தமிழக அரசின் மூலதன மானிய திட்டத்தின் (2022-2023 ) கீழ் ரூ. 1.14 இலட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் மூடியே கிடக்கின்றது. ஆகவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு வடகரை பேரூராட்சி புதிய அலுவலகத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட தலைமை நிருபர் ஜோ அமல்ராஜ்.