விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஜூலை 24 வியாழக்கிழமை காலை முதலே மூலவர் மற்றும் உற்சவ அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பூஜை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மூலவர் அங்காளம்மனுக்கு தங்கக் கவசமும், உற்சவ மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை அம்பாளுக்கு சிறப்பு என்பதால் பக்தர்கள் பொங்கல் படையல் வைத்து குலதெய்வ வழிபாடு செய்வர் எனவே மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்திற்கு பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் ஊஞ்சல் உற்சவத்தை காண காலை முதலே விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், வேலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்த வண்ணம் அம்மனை வணங்கியும், பொங்கல் வைக்கும் வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து இரவு 10.45 மணியளவில் பம்பை உடுக்கை மங்கள மேள வாத்தியம் இசைக்க பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ அங்காளம்மன் ஸ்ரீ நாகபூஷணி சிறப்பு அலங்காரத்தில் வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அம்மனை காண ஊஞ்சல் மண்டபத்தின் எதிரில் கூடியிருந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் சூடம் ஏற்றி அங்காளம்மா, அங்காளம்மா என மனமுருகி வழிபட்டனர். மேலும் பம்பை உடுக்கை இசைக்க ஆலய பூசாரிகளால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அம்மன் தாலாட்டு பாடல்கள் பாட பக்தர்கள் சிலர் அருள் வந்து ஆடினர் பின்னர் அம்மனுக்கு தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு ஆலய மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல்,
அறங்காவலர் குழு தலைவர்
சேட்டு (எ)ஏழுமலை மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள்
மதியழகன், சுரேஷ், ஏழுமலை,
பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும்
மேலாளர் மணி,
காசாளர் சதீஷ் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் 300 கும் மேற்பட்ட காவலர்கள், பாதுகாப்பு பணியிலும், தீயணைப்பு துறை சுகாதாரத் துறை ஈடுபட்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
