Thu. Aug 21st, 2025


RSS-BJP அரசின் மொழிப் போக்கை கண்டித்து பகுத்தறிவாளர் மற்றும் திராவிடர் கழகங்கள் சார்பில் குடியேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன கூட்டம்

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில், ஜூலை 25 ஆம் தேதி குடியேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் மாலை 6 மணியளவில் கண்டன தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம், சமஸ்கிருத மொழிக்கே மட்டும் ரூ.2,533 கோடி நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து நடைபெற்றது. இதில், தமிழ் உள்ளிட்ட ஐந்து தென்னிந்திய மொழிகளுக்கு வெறும் ரூ.147 கோடி மட்டுமே வழங்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப.ஜீவானந்தம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆசிரியர் பி.தனபால் வரவேற்புரை வழங்கினார். திராவிடர் கழகம் குடியேற்றம் நகரத் தலைவர் சி.சாந்தகுமார் கழகப் புரட்சிப் பாடல்களை வழங்கினார். கழக அமைப்பாளர் வி.மோகன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.ரம்யா ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.

மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் வி.சடகோபன் மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா.அழகிரிதாசன் ஆகியோர், தமிழுக்கு எதிரான மத்திய அரசின் போக்கை கடுமையாக விமர்சித்து உரையாற்றினர்.

மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரா.அன்பரசன் சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில்,

“இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 145 கோடியில், 8.5 கோடி பேர் தமிழ், 10.35 கோடி தெலுங்கு, 5.69 கோடி கன்னடம், 3.5 கோடி மலையாளம் பேசுகின்றனர். ஆனால் 24,000 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்திற்கே 2,533 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் நடவடிக்கை,” எனக் குறிப்பிட்டார்.

மேலும், தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிப் போராட்டங்களை, பெண்ணடிமை, சாதி, மத மோசடிகள், வேதாந்தக் கட்டுக்கதைகள் குறித்து மேற்கோள்களுடன் பொதுமக்களிடம் விளக்கினார்.

இந்நிகழ்வில் “அறிவு வழி” காணொளி இயக்குநர் தோழர் தாமோதரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திராவிட இயக்க உணர்வாளர்கள் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி. ராஜேந்திரன்

By TN NEWS