Wed. Jul 23rd, 2025



திருப்பூர்: இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லா பக்கமும் வெயில் வெளியிலேயே வர வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு அடிக்கிறது. அதிகப்படியான வெயில் காரணமாக பலரும் மலைப்பிரதேசங்களுக்கு பயணிக்கிறார்கள். அதேபோல் பலர் ஆறுகளில், அருவிகளில குளிக்க விரும்புகிறார்கள்..அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் குளித்தபோது கோவை ஆயுதப்படை காவலர் திரும்ப வரவே இல்லை.. என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரை உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி, அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி மலை ஆகியவை பிரபலமான சுற்றுலாத் தலங்களாக உள்ளன.இங்குள்ள அருவிகளில் குளிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படியே மலையில் ஏறி மூணாறு செல்லவும் விரும்புகிறார்கள். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை எல்லையாக கொண்ட மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் இருக்கிறது.

இதேபோல் திருப்பூர் மாவட்ட மக்கள் எளிதாக சென்று வரும் வகையில் கூப்பிடும் தூரத்தில் ஈரோடு மாவட்டத்தின் கொடிவேரி அணை இருக்கிறது. இதேபோல் தராபுரம் பகுதியில் அமராவதி அணையின் நீர் அருமையாக ஓடும். இந்த இரு ஆறுகளிலும் பலர் இப்போது குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள டி. காளிபாளையத்தைச் சேர்ந்த ராஜா கோவை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றியவர் சரவணன். ஆயுதப்படையில் முதன்மை காவலராக இருந்து வந்தார். நேற்று விடுப்பு எடுத்துக்கொண்டு ராஜாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பின் இருவரும் அமராவதி ஆற்றில் உள்ள காமாட்சி அம்மன் சுனை என்ற இடத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

கற்பனையில் நினைக்காத சம்பவம் அப்போது ராஜா மீன் பிடிக்க சென்றிருக்கிறார். ஆனால் சரவணன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். அப்போது திடீரென நீரில் மூழ்கிய சரவணனின் குரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டுள்ளார்கள். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் சரவணனை தராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆழமான இடங்களில் தயவு செய்து குளிக்க போக வேண்டாம்.நீச்சல் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாராக இருந்தாலும் தெரியாத இடங்களில் குளிக்க சென்றால், தயவு செய்து ஆழமான இடங்களுக்கு போக வேண்டாம்.சிலர் பாறை, சூழல் பற்றி அறியாமல் குதிக்கிறார்கள்.அதுவும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

திருப்பூர் சரவணக்குமார்

By TN NEWS