Tue. Jul 22nd, 2025

புனித ஹஜ் பயணத்திற்கு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலம் விண்ணப்பித்த 52,000 இந்திய ஹஜ் யாத்திரிகளுக்கான மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாததால், அவர்களின் பயணம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்த விவகாரத்தில் மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு 52,000 ஹஜ் யாத்திரிகளுக்கான பயணத்தை உறுதி செய்திட வேண்டும்.

நவாஸ்கனி எம்பி பிரதமர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு கடிதம்.

இதுகுறித்து இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ் கனி எம்பி, பிரதமர் மற்றும் ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது:

இந்த ஆண்டு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்திருந்த 52,000 ஹஜ் பயணிகளுக்கான மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாததால், அவர்கள் பயணம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்டிருந்த தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களுக்கான 52,000 ஒதுக்கீடுகளுக்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 52,000 ஹஜ் பயணிகள், தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலமாக அதற்கான கட்டணங்களை செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பதிவு செய்து, பயணத்திற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஒன்றிய சிறுபான்மை நலத்துறை மற்றும் சவுதி அரேபியா அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி, தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் ஹஜ் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத்தை முறையாக அனுப்பி இருக்கின்றனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளதாக வெளியான அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.

இது, இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 52,000 ஹஜ் பயணிகளின் புனித கடமையை கேள்விக்குறியாக்குகிறது.

ஒன்றிய சிறுபான்மை நலத்துறை, குறிப்பிட்ட நேரத்தில் சவுதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்திற்கு ஹஜ் பயணிகளுக்கான கட்டணத்தை செலுத்தத் தவறியதே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.

இது, 52,000 இந்திய இஸ்லாமியர்களின் கடமையான ஹஜ் பயணத்திற்கான நடவடிக்கை என்பதை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

52,000 ஹஜ் பயணிகளுக்கான பயணத்தை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு நவாஸ்கனி எம்பி, பிரதமர் மற்றும் ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மு.சேக் முஹைதீன்.

By TN NEWS