Tue. Jul 22nd, 2025



தேஜஸ்’ ரயில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கும், பின்னர் மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கும் செல்கிறது. திரும்பிச் செல்லும் போது திருச்சியில் மாலை 5:30 மணிக்கு வந்து பயணிகளை ஏற்றிக் கொள்கிறது.

காலையில் பயணிகள் ரயிலில் ஏறும் முன்பே அவர்கள் இருக்கையில் தினமலர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த நாளிதழுக்கான விலை ஏற்கனவே டிக்கெட்டில் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் மாலை வரும்போதும் மதுரையிலும் திருச்சியிலும் ஏறும் பயணிகளுக்கும், அவர்கள் உள்ளே வரும் பொழுதே, அவர்களது இருக்கைகளில் காலையில் வந்த தினமலர்தான் மறுபடியும் வைக்கப்பட்டிருக்கிறது.

இருக்கையில் அமர்ந்த பின்பு நாளிதழைக் கொடுத்தால், எங்களுக்கு வேறு நாளிதழ் வேண்டும் என்று பயணிகள் கேட்கலாம் என்பதால் முன்கூட்டியே இதை செய்து முடித்து விடுகிறார்கள்.

தேஜஸ் ரயிலில் C பெட்டிகள் 12 உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 78 இருக்கைகள். 12×78=936, ஒரு E பெட்டியில் 56 இருக்கைகள். ஆக மொத்தம் 992, மாலை ரயிலிலும் அதே காலை பேப்பர் 992. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 2000 தினமலர் இதழ்களை ஒரே ஒரு ரயிலில், இந்திய ரயில்வே விற்கிறது.

இதேபோல தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இருந்து 8 வந்தேபாரத் ரயில்கள் புறப்பட்டு, அதே நாளில் திரும்பி புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் 16 பெட்டிகள், 1128 இருக்கைகள். காலையில் புறப்படும் போது ஒரு பேப்பர் திரும்பி வரும் போதும் இதே பேப்பர். 1128x8x2= 18,048 இதழ்கள்.

ஆக மொத்தம் ஒவ்வொரு நாளும் 20,000 தினமலர் நாளிதழ்களை இந்திய ரயில்வே விற்றுக் கொடுக்கிறது. அதனால் ரயில்களிலும் விமான நிலையங்களிலும் கொடுப்பதற்கென்று தனி பதிப்பை தினமலர் அச்சிடுகிறது. (மேற்சொன்ன நமது கணக்கில் விமான நிலையங்களைச் சேர்க்கவில்லை)

இது முறைகேடு இல்லையா? பயணிகளின் விருப்பங்களையும் மீறி திணிப்பது இல்லையா? ஒரு குடும்பமாகவோ, நண்பர்களாகவோ நான்கு பேர் ரயிலில் பயணித்தால், நான்கு பேருக்கும் நான்கு தினமலர் இதழ்களைக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?

இதையெல்லாம் ED, CBI விசாரிக்காதா?

மற்ற பத்திரிகைகள், எங்களிடமிருந்தும், ரயில்வே இதழ்களை வாங்க வேண்டும் என்று கேட்க மாட்டார்களா?

ரயில்வே போர்டு உறுப்பினர்கள் இருக்கிறார்களே, அவர்கள் பயணிகளின் வசதிகளையும் பேசுவார்களா அல்லது தினமலர் விற்பதை பேசுவார்களா?

தமிழ்நாடு டுடே சிறப்பு செய்தியாளர்

By TN NEWS