Tue. Jul 22nd, 2025



1.) போக்சோ வழக்கில் தொடர்புடைய எதிரிக்கு நீதிமன்றத்தில் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதிப்பு

கடந்த 24.05.2020ம் தேதி திருப்பூர் மாநகரம், கே.வி.ஆர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம், அவரது வீட்டிற்கு அருகில் குடியிருந்து வந்த வந்த பாபு(வயது – 47) மற்றும் இளையராஜா(வயது – 38) ஆகியோர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட எதிரிகள் மீது கே.வி.ஆர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். 

திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு சாட்சிகளை முன்னிலைப்படுத்தி நீதிமன்ற விசாரணைக்குப்பின் 08.04.2025ம் தேதி அன்று நீதிபதி திரு.சுரேஷ்குமார் பொறுப்பு நீதிபதி, மகளிர் நீதிமன்றம் எதிரிகள் இருவருக்கும் தலா இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம், ச/பி 506(ii)ன் படி இரண்டு வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதம், மேற்படி அபராதத்தொகையை கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.  இவ்வழக்கினை அரசு வழக்குரைஞர் திருமதி.ஜமிலாபானு திறம்பட நடத்தினார். இவ்வழக்கினை திறம்பட கையாண்டு எதிரிக்கு தண்டனை பெற்றுதந்த கே.வி.ஆர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மற்றும் காவல் ஆளினர்கள் பாராட்டப்பட்டனர்.


2.) சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
         
         திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் டாஸ்மாக் பார் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.மேற்கண்ட இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது சிரில்(25) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேற்படி எதிரி சிரில் என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 180ML அளவுள்ள 29 மது பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்து வைக்கப்பட்டிருந்த பணம் ரூபாய் 5450/- பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம்.

By TN NEWS