Tue. Jul 22nd, 2025



வியாபாரிகள், விவசாயிகளின் நலனைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில தலைவர் அமீர் ஹம்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் சில அதிகாரிகளின் நடவடிக்கைகள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் உணவக உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. குறிப்பாக, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார் போன்றவர்களின் செயல்பாடுகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுகளை மீறுவதோடு, பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. 

உணவின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என்றாலும், விளம்பர நோக்கத்திற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும் சோதனைகளை வீடியோவாக பதிவு செய்து வெளியிடுவது, நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட தொழில்களை சீரழிக்கும் செயலாகவும் உள்ளது. உதாரணமாக, தர்பூசணியில் கலப்படம் உள்ளதாக பொய்யான தகவலை பரப்பி, பின்னர் விவசாயிகளின் எதிர்ப்பிற்கு பிறகு பின்வாங்கிய சம்பவம், 20,000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட தர்பூசணிகள் வயலிலேயே அழியும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விவசாயிகளும், கோடைகாலத்தில் ரோட்டோரங்களில் தர்பூசணி விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளும் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். 

மேலும், சிறு உணவகங்களில் நடத்தப்படும் சோதனைகளை வைரல் வீடியோக்களாக வெளியிடுவது, அந்த உணவகங்களின் நற்பெயரையும் வணிகத்தையும் பாதிப்பதோடு, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. உதாரணமாக, சென்னையில் உள்ள பிலால் உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் முறையாக இல்லை. அந்த உணவகத்தில் சோதனை நடத்துவதில் தவறு இல்லை என்றாலும், வீடியோக்கள் புடைசூழ நடத்தப்பட்ட  நடவடிக்கை, குறிப்பிட்ட அந்தக் கடையின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் அமைந்திருந்தது. பல்லாண்டுகளாக இயங்கி வரும் உணவகத்தின் நற்பெயரை இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சீர்குலைப்பது ஏற்புடையதல்ல. இத்தகைய நடவடிக்கைகள், உணவு பாதுகாப்பு என்ற பெயரில் விதிகளை மீறி, சமூகத்தில் புழங்கும் தொழில்களை அழிக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது. 

எனவே, தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். தவறான தகவல்களை பரப்பி, விவசாயிகளையும் வியாபாரிகளையும் பாதிக்கும் சதீஷ்குமார் போன்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

மேலும், நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, சோதனைகள் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு என்பது மக்களின் நலனை காக்கும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, தனிப்பட்ட புகழுக்காகவோ அல்லது தேவையற்ற பரபரப்பிற்காகவோ அல்ல என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். 

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமல்ராஜ்

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS