திருப்பூரில் மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்வு: உடனடி நடவடிக்கை தேவையென பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர், மார்ச் 30:
திருப்பூர் மாவட்டம், பாண்டியர் நகரில் சில நாட்களுக்கு முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென கீழே விழுந்த சம்பவம் ஏற்பட்ட நிலையில், இன்று எம். எஸ். நகரிலுள்ள மற்றொரு மின்சார டிரான்ஸ்பார்மர் ஒரே பக்கமாக சாய்ந்து, anytime விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு வட்டத்திற்குட்பட்ட நகரம் வடக்கு மின்வாரிய அலுவலக எல்லையில் உள்ள எம். எஸ். நகர் கொங்கு மெயின் ரோட்டில், TNK புரம் எஸ் எஸ் 14 எனும் டிரான்ஸ்பார்மர் புதிதாக தனியார் தொழிற்சாலைக்காக ஒத்த கம்பத்தில் நிறுவப்பட்டிருந்தது. ஆனால், அமைக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், தற்போது முழுவதுமாக ஒரே பக்கம் சாய்ந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், “சமீபத்திய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, மின்வாரிய அலுவலர்கள் இச்சிக்கலை அவசரமாக தீர்க்க வேண்டும். பெரும் விபத்து ஏற்படுவதற்குமுன், இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம் செய்தியாளர்.