செய்தி அறிக்கை
(14-02-2025)
*குண்டர் சட்டம், கைது என அடக்கு முறையை எதிர்கொண்ட மேல்மா சிப்காட் விவசாயிகள் – இன்று எந்தவிதமான அறிவிப்பும் இன்றி சட்ட விரோதமான முறையில் திருட்டுத்தனமாக நிலத்தில் கணக்கெடுப்பு எடுக்க வந்த வருவாய்த்துறை அலுவலர்களை விரட்டியடித்தனர்!!*
உறுதியுடன் போராடும் மேல்மா விவசாயிகளுக்கு துணை நிற்போம்!
============================
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
செய்தி அறிக்கை:
============================
தாங்கள் ஆட்சிக்கு வந்தால், *”ஒரு சென்ட் நிலத்தை கூட விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் எடுக்க மாட்டோம்”* என உறுதிமொழி கொடுத்து 2021-ல் ஆட்சிக்கு வந்தது திமுக.
ஆனால், திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட்டிற்காக, பதினொரு கிராமத்தில் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் விவசாயிகளின் நிலத்தை எந்தவித அவசியமும் இன்றி கைப்பற்ற முயற்சித்து வருகிறது திமுக அரசு.
இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் அற வழியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நேர்மையான மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத திமுக அரசு, போராட்டக் குழு பொறுப்பாளர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட போராடிய விவசாயிகளையும், 2000 காவலர்களை குவித்து நள்ளிரவில் இருபதுக்கு மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து அடக்கு முறையை ஏவியது. இதில் அமைச்சர் ஏ.வ.வேலு தூண்டுதலில், எந்தவித அறநெறியும் இன்றி சட்டவிரோதமாக ஏழு விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தையும் போட்டு அதில் ஒவ்வொருவரையும் தமிழ்நாடு முழுக்க வேலூர் முதல் பாளையங்கோட்டை வரை தனித்தனியாக சிறையில் அடைத்து அடக்கு முறையை ஏவியது.
(இதே போன்ற அடக்குமுறையை 2012-ல் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில், கைது செய்தவர்களை கடலூர்/ வேலூர் முதல் பாளையங்கோட்டை வரை அடைத்து வைத்து அன்றைய அஇஅதிமுக அரசு ஏவியது)
இதை எதிர்த்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுக்க உள்ள உழவர் அமைப்புகள் ஒருங்கிணைந்து போராடின.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், அறப்போர் இயக்கம், நேர்மை மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் / மக்கள் இயக்கங்கள் தொடர்ந்து குண்டர் சட்டத்தை எதிர்த்து ஆதாரங்களை முன்வைத்து சட்ட ரீதியாகவும், பொது வெளியிலும் போராடியதன் விளைவாக, தமிழக வரலாற்றிலேயே குண்டர் சட்டத்தில் கைது செய்த அனைத்து விவசாயிகளையும் அரசே தன்னை பாதுகாத்துக் கொள்ள குண்டர் சட்டத்தை நீக்கி 7 விவசாயிகளையும் விடுதலை செய்த வரலாறும் தமிழ்நாட்டில் முதன் முதலாக நடந்தது.
அடக்குமுறை/கைது/சிறை / அச்சுறுத்தல் என எது ஏவப்பட்டாலும் மக்கள் அஞ்சாமல் 550 நாட்களுக்கு மேலாக உறுதியுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர்
இந்நிலையில், இன்று 14-02-2025 வெள்ளிக்கிழமை சுமார் 11.00 மணியளவில் மேல்மா சிப்காட் பகுதியில் நில எடுப்பு அலுவலர்கள் எந்த முன் அறிவிப்பும் தராமல் திருட்டுத்தனமாக விவசாய நிலத்தில் உள்ள கிணறு மற்றும் பல அளவீடுகள் செய்ய வந்ததை அடுத்து அங்கு விவசாயிகள் திரண்டனர். அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்!!
590 நாட்களை கடந்து போராடி வரும் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகளின் போராட்டத்தை மதிக்காத *விவசாயிகள் விரோத திமுக அரசு* இன்று இளநீர்குன்றம்/ வட ஆளப்பிறந்தான் கிராமங்களில் நில அளவீடு மற்றும் கிணறு அளவீடு செய்ய வந்துள்ளனர்.
விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த பின் செய்தியாளரிடம் பேசிய மாவட்ட *அமைச்சர் திரு. எ வ வேலு அவர்கள்* சும்மா 10 நபர்கள் தான் போராடுகிறார்கள் என்று கூறி போராடியவர்களை இழிவு படுத்தினார்.
அதோடில்லாமல் சட்ட மன்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் விவசாயிகளே இல்லை என்றும் பச்சை பொய்யையும் அப்பட்டமாக கூறினார். அப்படி அவர் கூறியது உண்மை எனில், விவசாயிகள் யாரும் போராடவில்லை எனில் எதற்காக காவல்துறை பாதுகாப்புடன் நில உரிமையாளருக்கு தகவல் தராமல் திருட்டுத்தனமாக வந்தனர்? என்ற கேள்விக்கு விடை உண்டா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.
அமைச்சர் பேசுவதும் பொய், அற்புதமான நெல் விளையும் வயல்வெளிகளான நிலங்களை நில எடுப்பு அலுவலர்கள் அனுப்பிய தரிசு நிலம் என்ற கணக்கும் பொய். இது மட்டுமின்றி, செய்யாத குற்றத்தை செய்ததாக கூறி பொய் வழக்குகள் போட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைப்படுத்தி அடக்கு முறையை ஏவியது விவசாயிகள் விரோத திமுக அரசு.
இன்று நில எடுப்பு அலுவலர்கள், கணக்கீடு பணிக்காக அங்கு வந்த அலுவலர்களை நோக்கி விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் பின் வாங்கினர்.
1) சிப்காட்டிற்கு எடுக்க திட்டமிட்டுள்ள நிலம் அனைத்தும் தரிசு என்று கணக்கு கொடுத்துவிட்டு இப்பொழுது கிணறு அளவீடு செய்ய எப்படி வந்தீர்கள்? தரிசு நிலத்தில் கிணறு எப்படி இருக்கும்? யாரை ஏமாற்ற வந்துள்ளீர்கள்?
2) சார் ஆட்சியர் வாகனம் வந்துள்ளது இந்த இடத்தில் சார் ஆட்சியர் எங்கு உள்ளார்?
3) கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனம் வந்துள்ளது. தமிழ்நாடு அரசு பணிக்கு எதற்கு அந்த கர்நாடக வாகனம்?
இவ்வாறு பொதுமக்கள் கேள்விகள் எழுப்பிய பின்னர் வருவாய்த்துறையினர் பதில் ஏதும் சொல்ல முடியாமல் திரும்பி சென்று விட்டனர்.
இதே போன்ற நிலை தான், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி அருகே உள்ள குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக, விவசாயிகளின் நிலத்தை வலுக்கட்டாயமாக பிடுங்க 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தும், போராடும் மக்களை ஜனநாயக ரீதியில் செயல்பட விடாமல் காவல்துறையை வைத்து தடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
அரசு எவ்வளவு காவல்துறையை கொண்டு வந்து மிரட்டினாலும் மக்கள், எங்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுத்து வரும் “எங்கள் நிலத்தை சிப்காட்டிற்கு தர மாட்டோம்” என்பதை உறுதியாக போராடி வருகின்றனர்!
* திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தது போல், *”விவசாயிகளின் அனுமதி இன்றி விவசாய நிலத்தை பறிக்காதே”* என உரக்கச் சொல்வோம்!
*போராடும் உழவர்களுக்கு தமிழ்நாடே துணை நிற்போம்!!*
மேல்மா சிப்காட்/ குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட அனைத்து சட்ட விரோத/ விவசாய விரோத திட்டங்களுக்கு, விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலங்களை எடுப்பதை தடுத்து நிறுத்த துணை நிற்போம்!
*எங்கள் நிலம் எங்கள் உரிமை!*
*எங்கள் நிலம் எங்கள் உயிர்!!*
என குரல் கொடுத்துப் போராடும் உழவர்களின் கோரிக்கை நிறைவேற்று என உரக்கச் சொல்வோம்!
@ இரா.சா.முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
வழக்கறிஞர் ந. சண்முகம், ஒருங்கிணைப்பாளர், சட்ட விரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம்
97899 19686
14 -02- 2024.