பத்திரிகை செய்தி
சென்னை, ஜன.25
காடுகள் மற்றும் வனம் அல்லாத பகுதிகளில் அயல்நாட்டு கோனோகார்பஸ் தாவரங்களை நடுவதை நிறுத்த தமிழக அரசின் உத்தரவால் சுற்றுச்சூழல் சமநிலை மேம்படும் என கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு, கோனோகார்பஸ் (Conocarpus) மரத்தை சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் தீங்குகளைக் காரணம் காட்டி தடை செய்துள்ளதை சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் வரவேற்பு தெரிவித்து, தமிழ்நாடு அரசின் சூழல் மேம்பாட்டு நடவடிக்கைக்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
சதுப்பு நில அயல்நாட்டு மரமான கோனோகார்பஸ் பூபூக்கும்போது இதிலிருந்து வெளிப்படும் மகரந்த துகள்கள் காற்றில் கலந்து அதைச் சுவாசிப்பவர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜியை உண்டு பண்ணுகின்றன.
இந்த மரத்தில் ஆண்டு முழுவதும் அடர் பச்சை இலை இருக்கும். கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகளைத் தாங்கி வளருவதோடு, மண் மற்றும் காலநிலை நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் திறன் கொண்டதாகவும் விளங்குகிறது. மாநில அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு நகர்ப்புற பசுமை முயற்சிகளில் இது ஒரு விருப்பமான மரத்தேர்வாக இருந்தது.
நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், கால்நடைகள் அதன் இலைகளை உண்பதில்லை, தேனீக்களும் அவற்றைத் தவிர்க்கின்றன. இந்த இனம் மனிதர்களுக்கு சளி, இருமல், ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்படுத்தக்கூடும் என அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஏற்கெனவே குஜராத், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கோவா போன்ற மாநிலங்கள் இதைத் தடை செய்துள்ளனர்.
பொதுமக்களின் நலன் கருதியும், நிலத்தடி நீரை பாதுகாத்திட வரும், அனைத்து உயிரினங்களையும் காக்கும் வகையில் கோனோகார்பஸ் மரத்தை வளர்ப்பதை தமிழக அரசு தடை செய்ததுடன்;
தங்கள் வளாகத்தில் உள்ள கோனோகார்பஸ் தாவரங்களை மாற்ற விரும்பும் தனியார் நிறுவனங்கள், பசுமை தமிழ்நாடு மிஷனை நேரடியாக 18005997634 என்ற கட்டணமில்லா எண் மூலமாகவோ அல்லது “GTM ஒரு மரம் நடவும்” விண்ணப்பம் மூலமாகவோ தொடர்பு கொண்டு, மாற்று மரத்திற்கான இலவச பூர்வீக மரக்கன்றுகளைப் பெறலாம் என்ற அறிவிப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.
இவ்வாறு தனது செய்தி குறிப்பில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தெரிவித்துள்ளார்.
TNT SHAIKH MOHIDEEN.