மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் 108வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதன்போது அவர் பேசுகையில், “சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பேசிய முதல்வர், திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சித் தலைவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என பொய்யான தகவலை கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய ஆளுநர் உரையை இதுவரை வெளியிடவில்லை. நல்ல ஆண் மகனாக இருந்தால் அந்த உரையை வெளியிட்டு பின்னர் பேச வேண்டும்.
மூன்றரை ஆண்டுகளாக திமுக அரசு கடனில் மூழ்கியிருக்கிறது. வாங்கிய கடனை மக்கள் மீது வரி விதித்து கட்ட விரும்புகிறார்கள். ஆனால் நாங்கள் ஆட்சியில் இருந்த போது எங்கள் சொந்த பணத்தில் கடனை கட்டினோம். அதேபோல இந்த அரசும் செய்யுமா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “முதல்வர் இரு நாட்கள் மதுரை, சிவகங்கை பகுதிகளில் சுற்றினாலும், மேலூர் விவசாயிகளை சந்திக்க முன்வரவில்லை. மேலூர் விவசாயிகள் அச்சத்தில் இருக்கின்றனர். டங்ஸ்சன் திட்டத்தால் அவர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதைப் பற்றி முதல்வர் கவலைப்பட வேண்டாமா?
மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க தில் திராணி உள்ளதா? விவசாயிகளின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், அவர்களுடன் பேசி நம்பிக்கை அளிக்காமல் பொது மக்கள் முதல்வர் என உங்களை சொல்லிக்கொள்வது ஏன்?” என சவால் விடுத்தார்.
அவரது பேச்சின் கடைசி பகுதியில், “தமிழக மக்கள் திமுக அரசால் ஏமாற்றப்படுகிறார்கள். அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் என்பது உறுதி. ஜனநாயகம் மலரும் நாள் தூரத்தில் இல்லை” என தெரிவித்தார்.
– மதுரை செய்தியாளர்: வீர சேகர்.



