Wed. Jul 23rd, 2025

பொங்கல் பண்டிகையன்று நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யுஜிசி – நெட் தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 30 பாடங்களுக்கானத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இது முற்றிலும் தமிழர்களின் பண்பாட்டையும் அவர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்ட தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) தேர்வு கூட பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டது. பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யுஜிசி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “யுஜிசி தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றிட வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தற்போது அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு.

தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இனியாவது நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும். நமது நாட்டின் பன்முகத்தன்மையையும் இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சேக் முகைதீன்

By TN NEWS