விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் தந்த தேர்தல் ஆணையம்! சின்னம் என்ன தெரியுமா?
விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து இரு கட்சிகளின் தலைமைகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது:
இதுகுறித்து தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில் 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் விசிக, நாம் தமிழர் கட்சிகளின் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் சின்னங்கள் முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு விதிகளுக்கு இணங்கும் வகையில் உள்ளன.
எனவே உங்களது கட்சிகளை தமிழகத்தில் மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டபடி பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் முன்பதிவு செய்துள்ளது. எனவே இனி விசிக போட்டியிடும் தேர்தல்களில் அந்த கட்சி பானை சின்னத்தை கோரினால், அதை தேர்தல் ஆணையம் உடனே ஒதுக்கீடு செய்யும்.
ஆனால் நாம் தமிழர் கட்சி தங்களுடைய கட்சிக்கு ஏர் உழும் விவசாயி, புலி சின்னம் ஆகியவற்றை முன்பதிவு செய்யக் கோரி மனுக்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தது. அந்த சின்னங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட சின்னம் அல்லது விலங்கு சின்னத்தை ஒதுக்க முடியாது என்றும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகள் பெற்றதை அடுத்து நாம் தமிழர் கட்சியை தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கடிதம் வாயிலாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.சேக் முகைதீன்.


