400 கிராம் கஞ்சா, எலக்ட்ரானிக் எடை கருவி பறிமுதல்:
குடியாத்தம், ஜூன் 2:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 400 கிராம் கஞ்சா மற்றும் எலக்ட்ரானிக் எடை கருவியை பறிமுதல் செய்தனர்.
பேரணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள சுடுகாடு பகுதியில் இரு நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜயூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, 50 கிராம் வீதம் 8 பொட்டலங்களாக மொத்தம் சுமார் 400 கிராம் கஞ்சா மற்றும் ஒரு எலக்ட்ரானிக் எடை கருவி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வாட்ஸ்அப் குழு மூலம் விற்பனை:
விசாரணையில், ஏரிக்குத்தி மேடு அபிநகர் பகுதியைச் சேர்ந்த துபேல் (30) மற்றும் தோப்புத் தெருவைச் சேர்ந்த பாபு (49) ஆகியோர் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் உதவி ஆய்வாளர் ராஜயூ கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
