50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஓவிய உபகரணங்கள் வழங்கல்.

குடியாத்தம், மே 31:
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இலவச கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாமின் நிறைவு விழா குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை பெரியார் அரங்கில் நடைபெற்றது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட இந்த ஓவியப் பயிற்சி முகாம் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது. முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஓவியப் பயிற்சி பெற்றனர்.
சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு:
முகாமின் நிறைவு விழாவிற்கு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மருத்துவர் பழ. ஜெகன்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஆசிரியர் பி. தனபால் வரவேற்புரையாற்றினார். குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப. ஜீவானந்தம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் ஓவியம் வரைவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பகுத்தறிவும் அறிவியல் சிந்தனையும் அவசியம்:
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா. அன்பரசன் பேசுகையில், “இளைய தலைமுறையினரிடம் பகுத்தறிவு சிந்தனையையும், அறிவியல் மனப்பான்மையையும் வளர்ப்பது சமூகத்தின் முக்கியக் கடமையாகும். குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் நோக்கில்தான் இத்தகைய பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன” என்றார்.
சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள்:
பயிற்சி நிறைவையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டியில் சிறப்பாக ஓவியம் வரைந்த முதல் மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சதுரங்கப் பெட்டகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
மாவட்ட செயலாளர் முனைவர் வே. வினாயகமூர்த்தி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் ந. தேன்மொழி, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.இ. சிவக்குமார், தமிழியக்கம் செயலாளர் ஜெ. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மாணவர்களையும், ஓவிய ஆசிரியர் மெய்யழகனையும் பாராட்டிப் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணைச் செயலாளர் க. பரமசிவம் நன்றியுரை வழங்கினார்.
செய்தியாளர்:
K. V. இராஜேந்திரன்
குடியாத்தம்.
