Thu. May 28th, 2026

மே 27, குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், வளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராசம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இக்கோவிலில் ஸ்ரீ காளியம்மன், கங்கை அம்மன், ஸ்ரீ முருகன், வள்ளி, தெய்வானை, துர்கா தேவி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றன. திருவிழாவையொட்டி, இந்த அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன.

காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, அம்மனுக்கு கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த வழிபாடுகளில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

இரவு நேரத்தில் வான வேடிக்கை (வெடிகுண்டு நிகழ்ச்சி), மாவிளக்கு ஊர்வலம் மற்றும் புஷ்ப பல்லக்கில் தெய்வங்களின் திருவீதி உலா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ‘அம்மண் ஆராரோ’ கோஷங்களை எழுப்பினர். மாவிளக்கு ஒளியில் தெய்வங்களின் எழில் மிக அற்புதமாக காட்சியளித்தது.

இத்திருவிழா வெற்றிகரமாக நடைபெற ஏதுவாக, கிராம நாட்டாமை எஸ். குணசேகரன், மேட்டுக்குடியைச் சேர்ந்த வில்வநாதன், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா சேட்டு ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அவர்களின் தலைமையில் அன்னதானம், குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பக்தர்களுக்கு செய்யப்பட்டிருந்தன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து மனநிறைவு அடைந்தனர்.

கே.வி. ராஜேந்திரன்,
குடியாத்தம் செய்தியாளர்

By TN NEWS