விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், வட்டார போக்குவரத்துத் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், (20.05.2026) அன்று துவக்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

★ ஆய்வுக்கான அடிப்படை.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், 2026-2027 கல்வியாண்டிற்கான பள்ளிகள் துவங்குவதற்கு முன்பாகவே, தமிழ்நாடு பள்ளி வாகனங்கள் (ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள் 2012-ன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களையும் ஒரு பொதுவான இடத்தில் வரப்பெறச் செய்து, அவை பொதுச்சாலையில் இயக்கத் தகுதியாக உள்ளதா என பல்துறை அலுவலர்கள் குழு மூலம் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
★ எத்தனை வாகனங்கள்? – மாவட்ட வாரியாக:
விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் (விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம்) – 75 பள்ளிகள் – 281 வாகனங்கள்.
திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் (திண்டிவனம், வானூர், மரக்காணம்) – 43 பள்ளிகள் – 227 வாகனங்கள்
செஞ்சி மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் சார்பில் (செஞ்சி, மேல்மலையனூர்) – 25 பள்ளிகள் – 92 வாகனங்கள்
மொத்தம்: 143 தனியார் பள்ளிகள் – 600 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
★ ஆய்வில் சரிபார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்:
· வாகனம் முழுவதும் மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளதா
· மாணவ, மாணவியர் படத்துடன் கூடிய லோகோ ஒட்டப்பட்டுள்ளதா
· தீயணைப்புக் கருவிகள் வைத்திருப்பதோடு, ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்ட சான்று உள்ளதா
· ஜன்னல்களுக்கு குறுக்குக் கம்பிகள்
· முன்பக்க, பின்பக்க கண்காணிப்பு கேமரா
· முதலுதவிப் பெட்டி
· வாகனத்தின் இடது புறத்தில் பள்ளியின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள்
· பின் இடது புறத்தில் பொறுப்பாளர் எண், ஆர்டிஓ எண், காவல் நிலைய எண், பள்ளி மின்னஞ்சல்
· கதவுகள், தாழ்ப்பாள்கள் சரியாக இயங்குதல்
· படிக்கட்டுகளின் உறுதித்தன்மை
· வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, சென்சார், ஜிபிஎஸ்
· அவசரகாலக் கதவு (வலது பின்புறம்)
★ பழுது கண்டறியப்பட்டால்:
ஆய்வில் பழுது கண்டறியப்பட்டால், அதைச் சரிசெய்து 10 நாட்களுக்குள் மீண்டும் வாகனத்தைக் கொண்டு வந்து அனுமதி பெற்றுச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பள்ளிப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
★ உதவியாளர் கட்டாயம்:
ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் ஒரு உதவியாளர் கண்டிப்பாக நியமனம் செய்யப்பட வேண்டும். கேமராக்களில் பதிவாகும் தினசரிப் பதிவுகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் கண்காணிக்கப்படும்.
★ ஓட்டுநர்கள் & உதவியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
· அவசர வழிக் கதவு சரியாக உள்ளதா என தினமும் உறுதி செய்க
· இரு பக்கக் கதவுகளும் சரியாக அடைக்கப்பட்டதா பார்க்க
· குழந்தைகள் இறங்கிச் சென்றதை உறுதிசெய்த பின்னரே வாகனத்தை இயக்க
· தீயணைப்புக் கருவி இயங்குகிறதா என அவ்வப்போது சோதிக்க
· ஓட்டுநர்கள் செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கக் கூடாது
· இருக்கை எண்ணிக்கைக்கு மட்டுமே குழந்தைகளை ஏற்றிச் செல்ல
· குழந்தைகள் சாலையைக் கடக்க நேர்ந்தால், வாகனத்தை நிறுத்தி உதவியாளர் பாதுகாப்பாகக் கடத்திச் செல்ல வேண்டும்
· வாகனத்தைத் திருப்பும்போது பின்புறம் குழந்தைகள் இல்லாததை உறுதி செய்ய
★ பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு:
பள்ளி நிர்வாகத்தினர் வாகனங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, ஓட்டுநர்களுக்கும் உதவியாளர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும். ஓட்டுநர்களுக்குக் கண் பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தி கண்காணிக்க வேண்டும்.
★ தீயணைப்பு, கண் மருத்துவம், 108 ஆம்புலன்ஸ் பயிற்சி.
தீயணைப்புத் துறை சார்பில் தீத்தடுப்புக் குறித்த விளக்கமும், ஓட்டுநர்களுக்குச் செயல்முறை விளக்கமும் வழங்கப்பட்டது. தனியார் கண் மருத்துவமனை மூலம் இலவசக் கண் பரிசோதனையும், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலம் முதலுதவி குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார்.
★ நிகழ்ச்சியில் பங்கேற்றோர்:
திண்டிவனம் சார் ஆட்சியர் (பொ) காதர்அலி, விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன், திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் உதயசூரியன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகவேல், முருகேசன், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
· செய்தி: சக்திவேல் விஜயன், விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.
