Fri. May 8th, 2026

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பெரும் ஆபத்து தவிர்ப்பு.

அருகே உள்ள  ரேடியோ பொட்டல் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.

புதுப்பட்டி ரேடியோ பொட்டல் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளில் இருந்து திடீரென கரும்புகையுடன் தீ மளமளவென பரவியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். தீ வேகமாக பரவியதால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து பொதுமக்கள்  பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் அருகிலிருந்த மற்ற கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் ஜியாவுதீன் என்பவரின் நகை பாலிஷ் கடை, சரவணன் என்பவரின் டீக்கடை மற்றும் ராஜா என்பவரின் சைக்கிள் கடை ஆகிய மூன்று கடைகளும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. கடைகளில் இருந்த சைக்கிள்கள், உதிரிபாகங்கள், டீக்கடைப் பொருட்கள், மரத்தளவாடங்கள் மற்றும் நகை பாலிஷ் உபகரணங்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.

டீக்கடையில் அணைக்கப்படாமல் இருந்த நெருப்பிலிருந்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்னமராவதியின் மையப்பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

திருமலை நாகராஜன்
பொன்னமராவதி செய்தியாளர்

By TN NEWS