Sun. Apr 19th, 2026

பேரணாம்பட்டு, ஏப்ரல் 18:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு அருகே உள்ள அரவட்லா மலைப்பகுதியில், 72 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரவாட்லா மலைப்பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா கிராமத்தை சேர்ந்த சியாமளா (72) என்பவர் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (28), சூர்யா (24) ஆகியோர் நகைக்காக மூதாட்டியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, அவரது உடலை அருகிலுள்ள காப்புக் காட்டில் புதைத்ததாக போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பேரணாம்பட்டு போலீசார், இரு குற்றவாளிகளையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, பிரேத பரிசோதனை முடிந்து சியாமளாவின் உடல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆத்திரமடைந்து, குற்றவாளிகளின் வீடுகளை சூறையாடி தீவைத்தனர். இதில், இருசக்கர வாகனங்கள், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், பீரோ உள்ளிட்ட வீட்டு உபகரணங்கள் சேதமடைந்தன.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கூட்டத்தை கலைத்து தீயை அணைத்தனர். சேதமடைந்த பொருட்களையும் பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இந்த கலவரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சம்பவத்தில் ஈடுபட்ட 12 பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள்: வெங்கடேசன் (50), சுரேஷ் (47), இரத்தினவேல் (36), முத்துவேல் (31), லோகநாதன் (31), சக்திவேல் (27), பரத் (21), சிம்பு (20), நவீன் குமார் (23), திருமலை (23) ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள வேலன் மற்றும் கோபி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS