Sat. Apr 18th, 2026

சட்டம் vs மக்கள் கோபம் – உண்மை எது?

தமிழகத்தில் சமீப காலமாக காவல்துறையினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுமக்கள் மீதான தாக்குதல் முதல் துப்பாக்கிச் சூடு வரை சென்ற இந்த சம்பவங்கள் ஒவ்வொரு முறையும் பெரும் சர்ச்சையை கிளப்புகின்றன.

இத்தகைய சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட காவலர்கள் உடனடியாக “சஸ்பெண்ட்” செய்யப்படுவது வழக்கம். ஆனால், “ஏன் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படவில்லை?” என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து எழுகிறது.

சஸ்பெண்ட் – தண்டனை அல்ல, விசாரணையின் ஒரு பகுதி…!

சஸ்பெண்ட் என்பது ஒரு தண்டனை அல்ல; அது விசாரணை நடைபெறும் வரை அதிகாரியை தற்காலிகமாக பணியிலிருந்து விலக்கி வைக்கும் நிர்வாக நடவடிக்கை.

இந்திய அரசியலமைப்பின் Article 311 of the Constitution of India படி, எந்த அரசு ஊழியரையும் முறையான விசாரணை இல்லாமல் பணிநீக்கம் செய்ய முடியாது.

ஒரு சம்பவம் வெளிப்படையாக அத்துமீறலாகத் தோன்றினாலும், அது “பணி நிமித்தமான நடவடிக்கை” என்கிற கோணத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும். இதற்காக துறை ரீதியான விசாரணை அவசியமாகிறது.

டிஸ்மிஸ் – நிரந்தரமான கடுமையான தண்டனை…!

ஒரு காவலரை “டிஸ்மிஸ்” செய்வது என்பது மிகக் கடுமையான தண்டனை:

அரசு ஊழியர் என்ற அந்தஸ்து முற்றிலும் நீக்கம்

சம்பளம், ஓய்வூதியம், பணிக்கொடை அனைத்தும் ரத்து

மீண்டும் அரசு பணியில் சேர முடியாத நிலை

இதனால், உரிய விசாரணை இல்லாமல் டிஸ்மிஸ் செய்தால், நீதிமன்றத்தில் அது நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

மக்களின் கோபம் – ஏன் குறையவில்லை?

சட்ட நடைமுறைகள் இருந்தாலும், பொதுமக்களின் அதிருப்தி குறையவில்லை. அதற்கான முக்கிய காரணங்கள்:

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள் பின்னர் அமைதியாக மீண்டும் பணியில் சேருதல்

கடுமையான குற்றங்களுக்கும் தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுதல்

விசாரணைகள் நீண்டகாலம் நீடித்தல்:

இதனால், “சஸ்பெண்ட் என்பது கண்துடைப்பு நடவடிக்கை” என்ற நம்பிக்கை வலுப்பெறுகிறது.

மாற்றம் எங்கு தேவை?

சமூக நம்பிக்கையை மீட்டெடுக்க, கீழ்க்கண்ட நடவடிக்கைகள் அவசியம்:

விரைவான, பாரபட்சமற்ற துறை விசாரணை

விசாரணை முடிவுகளை வெளிப்படையாக வெளியிடுதல்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி மற்றும் கடுமையான தண்டனை

இடமாற்றம் மூலம் ‘மறைமுக பாதுகாப்பு’ வழங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி

முக்கிய கருத்து:

“சட்டம் என்பது சாமானியனுக்கும் காவலனுக்கும் ஒன்றுதான் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.”


செய்தியாளர்:

ராமர் – திண்டுக்கல் மாவட்டம்

By TN NEWS