Thu. Apr 9th, 2026

குடியாத்தம், ஏப்ரல் 8:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக குற்றச்சாட்டில் கூலி தொழிலாளி ஒருவரை கிராமிய போலீசார் கைது செய்துள்ளனர்.

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஏரி கொல்லி மேடு பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜ் (43), தந்தை வெங்கடேசன், என்பவர் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக கிராமிய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவிந்தராஜ் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ்க்கு கோமதி என்ற மனைவியும் தினேஷ் என்ற மகனும் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்


By TN NEWS