Sat. Apr 4th, 2026

தர்மபுரி

கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளி தினம், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மிகுந்த பக்தி உணர்வுடன் அனுசரிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசித்து வரும் நிலையில், கடத்தூர், பொம்மிடி, பள்ளிப்பட்டி, தென்கரைக்கோட்டை, அரூர், செல்லியம்பட்டி, கோவிலூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பொம்மிடியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயம் வளாகத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ் மற்றும் ஊர் தலைவர் எம். எப். ரமேஷ் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆலயத்தை மையமாக கொண்டு தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தின் போது, இயேசு கிறிஸ்துவின் இறுதி வேதனைகளை நினைவுகூரும் வகையில் நாடக வடிவில் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. பங்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இணைந்து சிலுவையில் அறையப்பட்ட சம்பவங்களை மிகத் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். இதற்கான பயிற்சிகளை இயக்குனரும் பங்கு பேரவை செயலாளருமான புஷ்பா ஏற்பாடு செய்திருந்தார்.

இயேசு வேடமிட்ட இளைஞர் சாட்டையால் அடிக்கப்படும் காட்சியும், சிலுவையில் அறையப்படும் நிகழ்வும் உணர்ச்சிகரமாக நடைபெற்றது. இதைக் கண்ட பக்தர்கள் பலர் கண்கலங்கிப் பக்தியில் மூழ்கினர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இந்த ஆன்மீக நிகழ்வில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பி. பள்ளிப்பட்டி கார்மேல் அன்னை ஆலயம் மற்றும் லூர்துபுரம் பகுதிகளிலும் இளைஞர்களால் புனித வெள்ளி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் புனித வெள்ளி நிகழ்ச்சிகள் அமைதியான மற்றும் ஆன்மீக சூழலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தர்மபுரி – சேலம் – கிருஷ்ணகிரி மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி

By TN NEWS