திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தோட்டத்து வீட்டில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையில், சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் ஆண்டியப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு தென்னந்தோப்பு வீட்டின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் கூடியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதில் தொடர்புடைய சுப்பிரமணி (50), வெங்கடேசன் (34), முருகேசன் (53), அழகர் (67), குமாரவேல் (37), செல்வகுமார் (36), பெலிக்ஸ் பெனிஸ் (38), ராஜ் (50), சிவராஜ் (51), சேகர் (54), மணிகண்டன் (42), ஐயப்பன் (43) உள்ளிட்ட 13 பேரை போலீஸார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ₹6,000 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக வடமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இதுபோன்ற சட்டவிரோத கூட்டங்கள் மற்றும் சூதாட்ட செயல்பாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் தோட்டத்து வீடுகளை பயன்படுத்தி இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ச. சந்திரமோகன்
திண்டுக்கல் மாவட்டம்
