Thu. Apr 2nd, 2026

தர்மபுரி, ஏப்ரல் 1:

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகத்தை ஆதரித்து அரூர் நகரப் பகுதியில் அவர் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பனை ஆதரித்து கடத்தூர் பேருந்து நிலையம் முன்பும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அரூர் ரவுண்டானா பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில், கடத்தூரில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில், வாகனத்தில் இருந்தபடியே அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், மத்திய அரசையும் அவர் தீவிரமாக தாக்கினார்.

அவர் தனது உரையில்,
“பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக மாற்றி மக்கள் விரட்ட வேண்டும்” எனக் கூறினார்.

மேலும், திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் ‘இல்லத்தரசி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்றும், அதன் மூலம் மின்சாதனங்கள் வாங்க உதவப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு நிதி ஒதுக்காத போதிலும் மக்களின் தேவைகளை நேரடியாக பூர்த்தி செய்துள்ளதாகவும் கூறினார்.

அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்த அவர், “அதிமுகக்கு போடும் ஓட்டு பாஜகவுக்கே செல்லும்” என தெரிவித்தார்.

“இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையேயான தேர்தல். மோடியா, தமிழ்நாடா என்பதை தீர்மானிக்கும் போட்டி” எனவும் வலியுறுத்தினார்.

தர்மபுரி மாவட்ட வளர்ச்சித் திட்டங்களைப் பற்றியும் அவர் உரையாற்றினார். தர்மபுரி – திருவண்ணாமலை இடையேயான 113 கி.மீ. நான்கு வழிச்சாலைப் பணிகள் ரூ.410 கோடி மதிப்பில் 60% நிறைவடைந்துள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சித்தேரி மலைப்பகுதி கிராமங்களுக்கு சாலை வசதிகள், தீர்த்தகிரீஸ்வரர் கோயில் சுற்றுலா மேம்பாடு, புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்ளூர் தேவைகளான கொங்கரப்பட்டி ஏரி தூர்வாருதல், அம்பேத்கர் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சமூக நலக்கூடங்கள் அமைத்தல் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

இறுதியாக,
“அடிமை ஆட்சியை மீண்டும் வரவிடாதீர்கள். உங்கள் வீட்டுப் பிள்ளையாகவும், கலைஞரின் பேரனாகவும் கேட்கிறேன். வரும் ஏப்ரல் 23 தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை வழங்குங்கள்” என உணர்ச்சிகரமாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

செய்தி:

ராஜீவ் காந்தி

By TN NEWS