Mon. Mar 23rd, 2026

நிலை கண்காணிப்பு குழுவின் அதிரடி நடவடிக்கை…!

குடியாத்தம், மார்ச் 22:

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த லோகேஷ் (35), சந்திப் (19) ஆகியோர் மினி வேனில் பன்றி வாங்குவதற்காக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மதனப்பள்ளி கிராமத்திற்கு வந்திருந்தனர்.

இந்நிலையில், குடியாத்தம் அருகே மாச்சம்பட்டு பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதீப் தலைமையில், தலைமை காவலர் வினோத் குமார் மற்றும் முதல் நிலை பெண் காவலர் சசிகலா ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, எந்தவித ஆவணமும் இன்றி ₹4 லட்சத்து 20 ஆயிரம் பணம் எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மினி வேனும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுபலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அந்த பணம் கருவூலம் அலுவலகத்தில் சேமிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், பன்றி வாங்குவதற்காகவே அந்த பணம் கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தோஷ் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS