கள்ளக்குறிச்சி, மார்ச் 19:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வடக்கு பகுதியில் சாலையின் நடுவே கம்பிவேலி அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி மற்றும் ஆவேசத்தில் உள்ளனர்.
இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு அந்தத் தெருவில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால், அந்த சாலையில் உள்ள சுமார் 40 அடி நீளமான பகுதி தனிநபருக்கு சொந்தமானது என கூறப்பட்டதால், அந்த பகுதியை தவிர்த்து மீதமுள்ள பேரூராட்சி சாலையில் மட்டும் தார் போடப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அந்த 40 அடி இடம் தமக்கு சொந்தமானது எனக் கூறிய தனிநபர் ஒருவர், சாலையின் நடுவே கம்பிவேலி அமைத்துள்ளார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
மேலும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், அவசர சிகிச்சைக்காக செல்ல வேண்டிய நோயாளிகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை அணுகி, கம்பிவேலியை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அப்பகுதி பெண்கள் அளித்த பேட்டியில்,
“எங்களுக்கு ஒரு நியாயம் வேண்டும். இந்த கம்பிவேலியை அகற்றாவிட்டால் எப்படி வீட்டிற்கு செல்வது? உடனடியாக பாதை அமைத்து தர வேண்டும்,” என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், “பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்கமாட்டோம்; தேவையானால் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம்,” என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வி. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி
