Thu. Mar 12th, 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நிர்வாகப் பிரிவில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சத்தியமூர்த்தி, பொதுமக்களிடம் அன்பும் மனிதநேயமும் காட்டும் அதிகாரியாக திகழ்ந்து வருகிறார்.

வேலூர் மாவட்டம் சேனூர் பகுதியைச் சேர்ந்த இவர், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் எளிமையாக பழகும் தன்மையால் அனைவராலும் பாராட்டப்படுகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு முதிய தம்பதி அவரது அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்களை பார்த்த சத்தியமூர்த்தி முதலில், “நீங்கள் சாப்பிட்டீர்களா?” என்று அக்கறையுடன் கேட்டார்.

பின்னர் உடனடியாக தனது உதவியாளரை அழைத்து, அலுவலக கேண்டீனில் இருந்து இரண்டு உணவுகளும் தண்ணீர் பாட்டிலும் வாங்கி வருமாறு உத்தரவிட்டார். மூன்று நிமிடங்களில் உணவு வந்ததும், “அறையில் உட்கார்ந்து அமைதியாக சாப்பிட்டு செல்லுங்கள்” என்று தாய் மனதுடன் அந்த முதிய தம்பதியரிடம் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் வீடு திரும்ப பணம் இருக்கிறதா என கேட்ட சத்தியமூர்த்தி, தனது சட்டைப் பையில் இருந்த பணத்தை எண்ணாமல் அவர்களுக்கு வழங்கினார்.

பின்னர் அவர்களின் பிரச்சினை குறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விசாரித்தார். அதில், அந்த தம்பதியர் தொடர்ந்து வீடு கோரி மனு அளித்து வருவதாகவும், அவர்களுக்கு மூன்று மகள்கள் இருந்தாலும் அவர்கள் திருமணம் செய்து தனித்தனியாக வசித்து வருவதால், இந்த முதிய தம்பதியருக்கு சொந்த வீடு இல்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், ராமமலை கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வீடு கட்டித் தருமாறு அவர்கள் கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்பட்டது.

இதனை கேட்ட உடனே, அந்த தம்பதியருக்கு வீடு வழங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிடிஓ சத்தியமூர்த்தி உத்தரவிட்டார்.

மனிதநேயத்துடன் செயல்படும் இப்படிப்பட்ட அரசு அதிகாரிகள் அனைத்து துறைகளிலும் இருந்தால், மக்கள் நலனும் நாட்டின் முன்னேற்றமும் உறுதியாகும் என பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

பிடிஓ சத்தியமூர்த்தியின் பணி மேலும் சிறக்க அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்




By TN NEWS