Thu. Mar 12th, 2026

கோவை, மார்ச்:
கோவை மாவட்டத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

தமிழர் தேசம் கட்சியை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில் கூறியதாவது:

அன்னூர் தாலுக்கா, வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட ஆண்டக்காபாளையம் கிராமத்தில் முத்தரையர் (வலையர்) சமூகத்தை சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். அதில் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு வசதி இல்லாததால், அருகில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் சாலை அமைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக குடியிருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி மாலை, சிலர் வந்து அவர்கள் குடியிருந்த குடிசைகளை சேதப்படுத்தியதாகவும், இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் வீடின்றி உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலாம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் விளக்கம் அளிக்கையில், அந்த நிலம் கமலம் என்ற நபருக்கு சொந்தமானது என்றும், அங்கு சிலர் அனுமதி இல்லாமல் குடிசைகள் அமைத்து தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நில அளவை செய்ய அன்னூர் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நமது சிறப்பு நிருபர்.

By TN NEWS