Tue. Mar 10th, 2026

விழுப்புரம், மார்ச் 10:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாவந்தூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி குடும்பம் கடன் பிரச்சினையால் வீட்டை இழந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருக்கோவிலூரில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் பாவந்தூரை சேர்ந்த தண்டபாணி என்பவர் கடன் பெற்றிருந்தார். பின்னர் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் மாத தவணைகளை செலுத்த முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிதி நிறுவனம் அவரிடம் ரூ.8 லட்சம் தொகையை கட்டுமாறு கோரியதுடன், அவரது வீட்டிற்கு சீல் வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வீடின்றி திண்டாடிய தண்டபாணி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தங்க இடமின்றி சாலை ஓரத்தில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் மனவேதனையில் இருந்த அந்த குடும்பத்தினர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தண்ணீர் ஊற்றி அவர்களை தடுத்து நிறுத்தினர்.

வீட்டை இழந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கதறி அழுத அந்த குடும்பத்தினரின் நிலை அங்கிருந்த பொதுமக்களை கண்கலங்க வைத்தது.

செய்தி: ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
தமிழ்நாடு டுடே
கள்ளக்குறிச்சி மாவட்டம்




By TN NEWS