Fri. Mar 6th, 2026

மு.க.அழகிரி மகள் கயல்விழி அரசியலுக்கு வருவாரா?

தமிழக அரசியலில் குடும்ப பாரம்பரியம் பேசப்படும் போது முதலில் நினைவிற்கு வரும் பெயர் M. கருணாநிதி. மாணவ பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு, பல தசாப்தங்கள் தமிழக அரசியலை வழி நடத்தியவர் கலைஞர்.

அவரது அரசியல் பயணம் மட்டுமல்ல, அவரது குடும்பமும் தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தற்போது தமிழக முதல்வராக M. K. ஸ்டாலின், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின், எம்.பியாக கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோர் அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். மேலும் தயாநிதி மாறன் போன்றவர்கள் தேசிய அரசியலிலும் தாக்கம் செலுத்தியவர்கள்.

ஸ்டாலின் – அழகிரி அரசியல் போட்டி.

கலைஞர் காலத்திலேயே அவரது அரசியல் வாரிசு யார் என்ற கேள்வி எழுந்தது. அந்த போட்டி M. K. ஸ்டாலின் மற்றும் M. K. அழகிரி ஆகியோருக்கிடையே உருவானது.

ஒரு கட்டத்தில் தென்மாவட்டங்களில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்ற தலைவராக அழகிரி இருந்தார். மதுரை மற்றும் தென் தமிழக அரசியலில் அவரது ஆதரவாளர்கள் வலுவாக இருந்தனர். ஆனால் பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகிய நிலையில் இருந்தார்.

புதிய தலைமுறை அரசியல்?

இந்த நிலையில், சமீபகாலமாக அழகிரியின் மகள் கயல்விழி அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற தொடங்கியுள்ளார். பல ஊடகங்களில் தோன்றி தனது தந்தையின் அரசியல் பயணம் மற்றும் தென்மாவட்டங்களில் அவர் பெற்ற செல்வாக்கு குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.

அவரது பேட்டிகளில், மதுரை மற்றும் தென்மாவட்ட அரசியலில் அழகிரியின் பங்கு, தேர்தல் வெற்றிகள், அப்போது உருவான அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசுவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மதுரையில் மீண்டும் பரபரப்பு.

கலைஞர் மறைவுக்குப் பிறகு அழகிரி குடும்பமும் ஸ்டாலின் குடும்பமும் அரசியல் ரீதியாக தனித்த பாதையில் இருந்தாலும், தற்போது கயல்விழியின் அரசியல் வருகை குறித்து எழுந்துள்ள தகவல்கள் மதுரை மற்றும் தென்மாவட்ட அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வருவாரா?

கயல்விழி அரசியலுக்கு அதிகாரப்பூர்வமாக வருவதாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருந்தாலும், அவர் அரசியல் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்த தொடங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

எதிர்காலத்தில் கலைஞர் குடும்பத்தின் அடுத்த தலைமுறை அரசியல் முகமாக கயல்விழி உருவாக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.

சிறப்பு கட்டுரை:
ஷேக் முகைதீன்

By TN NEWS