Sat. Feb 7th, 2026

‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’ – கருத்துக் கேட்பு
வேலூர் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 – “உங்கள் கனவுகளை சொல்லுங்கள்” என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில், ஓய்வுபெற்ற ஆசிரியரும் காட்பாடி ரெட்கிராஸ் அவைத் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் பல்வேறு வளர்ச்சி சார்ந்த கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலட்சுமி அவர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில் வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் முகமது சகி ஆகியோர் முன்னிலையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

சுகாதார வசதிகள் – 2030 மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திட்டமிடல்
அரசு நகர்ப்புற மற்றும் ஊர்ப்புற சுகாதார நிலையங்கள் மூலம் மக்களுக்கு அருகாமையில் மருத்துவ சேவைகள் வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், வாரத்தில் ஒரு நாள் சிறப்பு மருத்துவர்கள் வருகை தரும் வகையில் கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார். மேலும், 2030 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகையை கணக்கிட்டு, கூடுதலாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களை அமைக்க திட்டமிட வேண்டும் என வலியுறுத்தினார்.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு நகர பேருந்து வசதி
அடுக்கம்பாறையில் இயங்கி வரும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, காட்பாடி, அலமேலுமங்காபுரம், சத்துவாச்சாரி, கொணவட்டம், அரியூர், ஸ்ரீபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நகர பேருந்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரினார். இதனால் பொதுமக்கள் எளிதில் மருத்துவமனைக்கு சென்று வரவும், மாநகரில் இருசக்கர மற்றும் பிற வாகன போக்குவரத்து குறையவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

மரங்கள், சுற்றுவட்டப் பாதை, பேருந்து நிலையங்கள்
சாலை அகலப்படுத்தும் பணிகளில் அகற்றப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, சாலைகளின் இரு மருங்கிலும் புதிய மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வேலூர் மாநகருக்கென வாகன நெரிசலை குறைக்கும் வகையில் சுற்றுவட்டப் பாதை அமைக்க வேண்டும் என்றார். சென்னை, மதுரை போன்ற நகரங்களைப் போல, காட்பாடி, சத்துவாச்சாரி, பாகாயம், கொணவட்டம், ஸ்ரீபுரம் பகுதிகளில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்தார்.

காட்பாடி போக்குவரத்து நெரிசல் தீர்வுகள்
காட்பாடி ரயில் நிலைய சந்திப்பு எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருப்பதால், நகர பேருந்துகள் நேரடியாக ரயில் நிலையத்திற்குள் வந்து சென்றால் நெடுஞ்சாலையில் நெரிசல் குறையும் என்றார். செயல்படாமல் உள்ள போக்குவரத்து சிக்னல்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், நகர பேருந்து வழித்தடங்கள் 20 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட நேர அட்டவணையை தற்போதைய போக்குவரத்து சூழ்நிலைக்கு ஏற்ப திருத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேம்பால விரிவாக்கம் கோரிக்கை
பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் அல்லது கூடுதலாக புதிய மேம்பாலம் கட்டப்பட வேண்டும் எனக் கருத்து முன்வைக்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்றோர்
இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆடிட்டர் பாண்டின், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சீனிவாசன், ருக்ஜிராஜேஸ்குமார், எஸ்.ரமேஷ்குமார், பேராசிரியர் திருமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தி. தென்பாண்டியன்,
வேலூர் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS