Sat. Feb 7th, 2026

சி.நரசிம்மன் தலைமையில் கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் இன்று (06.02.2026) வேலூர் வடக்கு மாவட்ட கழக அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட கழக பொருளாளர் சி.நரசிம்மன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலையில் நடந்தது.

துரைமுருகன் அறிவுரைகள்
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, கழகப் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு, கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

பிப்.14 பாக முகவர்கள் பயிற்சி மாநாடு
வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில், வேலூர் வடக்கு மாவட்ட பிரதிநிதிகள் கட்டாயமாக பங்கேற்கும் வகையில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மார்ச் 8 மாநாடு – ஏற்பாடுகள் தீவிரம்
வருகிற மார்ச் 8-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள மாநாட்டில் அதிகளவில் தொண்டர்கள் பங்கேற்கவும், அதற்கான போக்குவரத்து உள்ளிட்ட ஏற்பாடுகளை மாவட்ட அளவில் சிறப்பாக மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை
“தமிழ்நாடு தலைகுனியாது” என்ற கருப்பொருளில், கழகத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ள பரப்புரையை வீடுதோறும் கொண்டு சேர்க்க, தெருமுனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பரப்புரை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை
மேலும், வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு களப்பணிகள், மாவட்டக் கழக அளவிலான ஒருங்கிணைப்புப் பணிகள் மற்றும் நிர்வாக செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தி. தென்பாண்டியன்,
வேலூர் மாவட்ட செய்தியாளர்

 

By TN NEWS