சட்டமன்ற வேட்பாளர் விருப்ப மனு தாக்கல்: மாவட்ட செயலாளர் MA. செல்லத்துரை அழைப்பு.
தேனி :
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேனி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கம்பம் மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம், தேனி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் MA. செல்லத்துரை பேசுகையில்,
“மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள நமது கேப்டன் அவர்களின் ஆசியோடும், கழகத்தை போர்க்களமாக நின்று வழிநடத்தும் நமது பொதுச் செயலாளர் அவர்களின் ஆணைப்படியும், தமிழகத்தில் மீண்டும் ஒரு மாற்றத்தை உருவாக்க நாம் தயாராகிவிட்டோம்” என உற்சாகமாக தெரிவித்தார்.
குறிப்பாக, தேனி தெற்கு மாவட்டத்தில் உள்ள கம்பம் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய இரு தொகுதிகளிலும் முரசு சின்னத்தை வெற்றி பெறச் செய்வது கழகத் தொண்டர்களின் கடமை என அவர் வலியுறுத்தினார். மக்கள் பணியில் தங்களை அர்ப்பணிக்க விரும்பும் தகுதியுள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அடையாளம் காணும் நோக்கில்,
வரும் 11.02.2026 (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவித்தார்.
“கழகத்தின் அடிப்படை உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தேர்தலில் போட்டியிடும் உரிமை உண்டு என்பதே நமது கேப்டன் கற்றுத்தந்த ஜனநாயகம். அந்த உரிமையைப் பயன்படுத்தி உழைக்கும் கரங்கள் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே நமது லட்சியம்” என அவர் கூறினார். மேலும், போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் அனைவரும் வரும் 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தன்னுடன் சென்னைக்கு வரத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கழகத் தலைவர் P. காசிமாயன், மாவட்டப் பொருளாளர் OM பிரபு, சின்னமனூர் நகரச் செயலாளர் MRS முருகன், கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, தேர்தல் பணிகளை ஒருங்கிணைந்து முன்னெடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
செய்தி தொகுப்பு : அன்புபிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமை செய்தியாளர்

