
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் புகார்!
தென்காசி | டிசம்பர் 24.
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பள்ளியில் சுயநிதி பிரிவு ஆசிரியராக பணிபுரிந்து வரும் அனுசியா என்பவரின் மகன், அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் பணிபுரியும் சுயநிதி பிரிவு ஆசிரியர் ஒருவரும், பள்ளி குழு உறுப்பினரும் இணைந்து, தனது மகனை கடுமையாக திட்டி, தாக்கியதாகவும், சக மாணவர்கள் முன்னிலையில் அவமதித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், காலாவதியான 50-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததாக தாய் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அவர், வீட்டின் கழிவறை கதவை உடைத்து மகனை மீட்டு, உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தற்போது மாணவன் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, “திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் அளிக்கவும்” என கூறி அழைப்பை துண்டித்ததாகவும், இதுவரை பள்ளிக்கோ அல்லது மருத்துவமனைக்கோ காவல் துறை அல்லது கல்வித் துறை அதிகாரிகள் யாரும் நேரில் வந்து விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவன் எழுதியதாக கூறப்படும் தற்கொலைக் கடிதத்தின் நகலுடன், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த சம்பவம் கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்
ஜே. அமல்ராஜ்
