Wed. Dec 17th, 2025

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலின் திருஆபரணப் பெட்டி, வழக்கம்போல் இந்த ஆண்டும் பக்தர்கள் வழிபடுவதற்காக தென்காசிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த 35 ஆண்டுகளாக இந்த பாரம்பரிய ஆன்மீக நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மகோற்சவ விழா இந்த ஆண்டு 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருஆபரணங்கள், கேரள மாநிலம் புனலூர் புதிடம் கிருஷ்ணன் கோயிலிலிருந்து திருஆபரணப் பெட்டியாக கொண்டு வரப்படுகிறது.

இந்த திருஆபரணப் பெட்டியில்,

சுவாமியின் திருமுகம்,

மார்பு, கைகள், கால்கள்,

பெரிய அளவில் கோமேதகம் பதிக்கப்பட்ட கிரீடம்,

தங்க அங்கி,

காசு மாலைகள், தங்க மாலைகள்,

தங்க பூண் சங்கு,

ருத்ராட்ச மாலை உள்ளிட்டவை அடங்கியுள்ளன.


இந்த அனைத்தையும் இணைக்கும் போது, அது முழுமையான சுவாமி ஐயப்பன் விக்ரகமாக உருவாகும் என்பது பக்தர்களிடையே ஆன்மீக பரவசத்தை ஏற்படுத்துகிறது.

புனலூர் புதிடம் கிருஷ்ணன் கோயிலில், திருஆபரணங்கள் இரண்டு மணி நேரம் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். பின்னர் காலை 8.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, யானை முன்செல்ல, பஞ்சவாத்தியம் முழங்க, பக்தர்கள் புடைசூழ, கேரள காவல்துறை பாதுகாப்புடன் புனலூர் நகரில் திருஆபரண கோஷ யாத்திரை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து உருகண்ணு, ஒற்றக்கல், கழுதுருட்டி, தென்மலை, ஆரியங்காவு உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.

பின்னர், எல்லைப் பகுதியான கோட்டைவாசலில் இருந்து, தமிழக காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் திருஆபரணப் பெட்டி தமிழக எல்லைக்குள் கொண்டு வரப்படும்.
புளியறை, காலாங்கரை, செங்கோட்டை ஆகிய இடங்களில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க, பிற்பகல் 1 மணியளவில் தென்காசி வந்தடையும்.

தொடர்ந்து, தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு திருஆபரணப் பெட்டிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பக்தர்கள் தரிசனம் செய்த பின்னர், கணக்கப்பிள்ளை வலசை, பண்பொழி, திருமலைக்கோயில், மேக்கரை வழியாக மாலை 5 மணியளவில் அச்சன்கோவிலுக்கு திருஆபரணப் பெட்டி கொண்டு செல்லப்படும்.

மாலை 6.45 மணிக்கு, திருஆபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

வரும் டிசம்பர் 17-ஆம் தேதி, மண்டல மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


அமல்ராஜ்
தென்காசி மாவட்ட தலைமை செய்தி தொடர்பாளர்

By TN NEWS