Tue. Dec 16th, 2025

வெறுப்புப் பேச்சு: ஜனநாயகம் எதிர்கொள்ளும் நவபாசிச சவால் – என்.ராம்
தீக்கதிர் . டிசம்பர் 8, 2025

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் ஊடகவியலாளர் என். ராம் அவர்கள் காணொலி மூலம் உரையாற்றினார். வெறுப்புப் பேச்சுக்களுக்குப் பின்னேயுள்ள அரசியல் குறித்து அவர் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘வெறுப்புப் பேச்சு’ (Hate Speech) என்பது வெறுப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதாகும். அதிதீவிர வலதுசாரி சக்திகள்தான் இவற்றை உலகம் முழுவதும் செய்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் டிரம்ப் இயக்கம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். சமூக ஊடகங்களான வாட்சாப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற வற்றின் வருகைக்குப் பின், இந்த வெறுப்புப் பேச்சு மிகப் பெரிய அளவில் ஓங்கி வளர்ந்திருக்கிறது.

எல்லா மேற்கத்திய நாடுகளும் இந்த வெறுப்பு அரசியலுக்கு ஆட்பட்டிருக்கின்றன. குறிப்பாக, பிற்போக்கு வலதுசாரி சக்திகள் மற்றும்  நவ பாசிச சக்திகள் இந்த வெறுப்பு அரசியலை அதிகமாகப் பின்பற்றுகின்றன. இந்தியாவைப் பொறுத்த அளவில், வெறுப்பு அரசியல் 2014-க்கு முன்பே இருந்தாலும், 2014-க்குப் பிறகு அது பெரும் அளவுக்கு வளர்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம். தேசிய  அளவில் வெறுப்புப் பேச்சுக்கு இருக்கும் அர சியல் பின்னணியைப் புரிந்து கொண்டால்தான், ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் இந்த வெறுப்பு அரசியலை நம்மால் சமாளித்து, முறியடித்துத் தோற்கடிக்க முடியும்.

இந்தியாவில் ஜனநாயகம்  அபாய நிலையில்… ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெறுப்பு அரசியல் மாபெரும் சவாலாக முன்னுக்கு வந்திருக்கிறது. 2024  நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை நிலையை இழந்தாலும், கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இந்த ஓரளவு தோல்விக்குப் பிறகும், அவர்கள் முன்னைவிட மூர்க்கத்தனமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு நாட்டில் ஜனநாயகம் ஒரு அபாய நிலையில் இருக்கிறது. மதச் சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள். தைரியமாகப் பேசக்கூடிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவர் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆள்வோரைக் கண்டித்து விமர்சனம் செய்தால், அவர்கள் மீது உடனடியாகத் தேசத்துரோகச் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

குளோபல் பிரஸ் மீடியம் அமைப்பின் 2025 அறிக்கைப்படி, இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை 180 நாடுகளில் 151ஆவது இடத்தில் இருக்கிறது. இது பாகிஸ்தானுக்கு இணையான நிலைமையைக் காட்டுகிறது. இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டு மற்றும் பிற்போக்குக் கொள்கைகள் பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம் பல மோசமான கொள்கைகளைக் கொண்டு வந்திருக்கிறது.

‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற  திட்டம் நிறைவேற்றப்பட்டால், மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பங்களிப்பு குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்துள்ளனர். ‘லவ் ஜிகாத்’ என்று பிரச்சாரம் செய்து முஸ்லிம்களை மிரட்டுகிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் நாட்டின் வரலாற்றையே திரித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இந்துத்துவாவாதிகள், பெரிய கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு சேர்ந்து, அவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். இதை இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டு என்று அழைக்கிறோம். அரசின் நிறுவனங்களான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அனைத்தும் பாஜகவிற்குச் சாதகமாகப் பயன் படுத்தப்படுகின்றன. நீதிமன்றங்களிலும் உயர்நீதிமன்றங்களிலும் கூட பல சூழ்ச்சிகள் நடக்கின்றன. கொலிஜியம் சிஸ்டம் இன்றைக்கு நம்பக்கூடிய நிலையில் இல்லை; விசித்திரமான நியமனங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

எழுத்தாளர்களின் பொறுப்பு அடுத்த ஆண்டு தமிழகத்திற்கும் கேரளா விற்கும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இதில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டியது மிக முக்கியமானதாகும். இதனைத்  தோற்கடிப்பதில் எழுத்தாளர்களுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. கட்சிக்கு அப்பாற்பட்டு இருப்பவர்கள் கூட, நாட்டில் உள்ள ஒட்டுமொத்த நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு, பாஜகவிற்கு எதிராக இறங்கிட வேண்டும். தென் மாநிலங்களில் தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளாவில் பாஜகவிற்குப் பெரிய  பலமில்லை. இந்த நிலையை நாம் காப்பாற்ற வேண்டும்.

அவர்களோடு கூட்டணி சேர்பவர்களை விமர்சனம் செய்திட வேண்டும். ஏனென்றால், ஜனநாயகம் இன்றைக்கு ஆபத்தில் இருக்கிறது. ஒன்றுபட்டிருக்கும் மக்கள் மத்தியில் நிரந்தரமான பிளவு வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.

எழுத்தாளர் – கலைஞர்களாகிய நீங்கள் இந்த நாட்டிலுள்ள நிலைமையைச் சரியான முறையில் புரிந்து கொண்டு, அதற்கு எதிராக வலுவான முறையில் செயல்பட முன்வர வேண்டும். என N. ராம் அவர்கள் உரையாற்றினார்.

ஷேக் முகைதீன்

இணை ஆசிரியர்.

By TN NEWS