Sat. Dec 20th, 2025

 


இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கான புதிய ரேஷன் கார்டு பெற கடந்த மார்ச் மாதம் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து ரேஷன் கார்டு தயாராகி மூக்கையூர் ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டதாக கடலாடி தாலுகா அலுவலகம் தகவல் வழங்கியது.

கார்டுக்காக ரூ.3,500 லஞ்சம் கோரினார்:

புதிய ரேஷன் கார்டு வந்துள்ளதாக தெரிவித்து, அதைப் பெற ரேஷன் கடை விற்பனையாளர் முத்துலட்சுமி ரூ.3,500 லஞ்சம் கொடுக்கக் கேட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார் தாரர் பணம் இல்லை என தெரிவித்தபோதும், “கண்டிப்பாக பணம் கொடுக்க வேண்டும்” என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மருத்துவ காப்பீடு செய்ய அவசரம் – மீண்டும் லஞ்சம் கோரிக்கை:

புகார்தாரரின் மனைவி உடல்நலக்குறைவால் மருத்துவ காப்பீடு செய்ய ரேஷன் கார்டு அவசரமாக தேவைப்பட்டதால், அவர் மீண்டும் முத்துலெட்சுமியை அணுகினார்.
அப்போது “அதிகாரிகளுக்கு தர வேண்டிய தொகையில் ரூ.500 குறைத்து, ரூ.3,000 ஐ தற்காலிக பணியாளர் சுப்பிரமணியிடம் கொடுக்கவும்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

கைது நடவடிக்கை:

நேற்று முன்தினம் மாலை, ரசாயனம் தடவப்பட்ட ரூ.3,000 ஐ ரேஷன் கடை முன்பகுதியில் சுப்பிரமணியிடம் புகார்தாரர் வழங்கினார்.
அந்த நேரத்தில் மறைந்து கண்காணித்த டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியை கையும் களவுமாக கைது செய்தனர்.

விசாரணையில்:

“விற்பனையாளர் முத்துலெட்சுமி கூறியதற்காகவே பணம் பெற்றேன்” என்று சுப்பிரமணி ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து விற்பனையாளர் முத்துலெட்சுமியும் கைது செய்யப்பட்டார்.


இந்த சம்பவம் பொதுமக்கள் சேவைகளில் நடைபெறும் லஞ்ச கோட்பாட்டின் அருவருப்பை மீண்டும் வெளிக்கொணர்கிறது.

வே. செந்தில்குமார்
மாவட்ட செய்தியாளர்

By TN NEWS