தருமபுரி:
தருமபுரி மாவட்டம், திப்பிரெட்டிஅள்ளி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம்:
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்தில் கே.கே.122 திப்பிரெட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (அஞ்சல் குறியீடு – 635301) செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்திற்குப் புதிய கட்டிடம் கட்டுவதற்காகச் சுமார் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காரியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அடித்தளம் அமைப்பதில் அலட்சியம்?
தற்போது நடைபெற்று வரும் இக்கட்டுமானப் பணியில், கட்டிடத்தின் மேற்கூரை மட்டம் சுமார் 15 அடி முதல் 20 அடி உயரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு உயரம் கொண்ட கட்டிடத்திற்கு வலுவான அடித்தளம் அமைப்பது மிக அவசியமாகும்.
இருப்பினும், தற்போது போடப்பட்டுள்ள அஸ்திவாரம் (Footing) மற்றும் அதற்காகத் தோண்டப்பட்ட குழியானது தரைமட்டத்திலிருந்து ஒரு அடி ஆழம் கூட இல்லை என்று கூறப்படுகிறது. இவ்வளவு குறைவான ஆழத்தில் அடித்தளம் அமைப்பது கட்டிடத்தின் உறுதித்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை நிராகரிப்பு:
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், ஒப்பந்ததாரரிடமும் சம்பந்தப்பட்டவர்களிடமும், “அரசுத் திட்ட மதிப்பீட்டின்படியும், சரியானத் தரத்துடனும் பணிகளை மேற்கொள்ளுங்கள்” என்று பலமுறை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இந்தக் கோரிக்கைகளை அலட்சியப்படுத்திவிட்டு, தொடர்ந்து தரமற்ற முறையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை:
கூட்டுறவுச் சங்கக் கட்டிடம் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுச் சொத்தாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள தரக்கட்டுப்பாட்டு விதிகளின்படி கட்டிடம் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தி சேகரிப்பு:
ராஜீவ் காந்தி,
மண்டல செய்தியாளர்.
