Mon. Dec 22nd, 2025

குடியாத்தம், நவ. 21:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வாகன தணிக்கையின் போது, அரசால் தடை செய்யப்பட்ட மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) போதைப்பொருளை வைத்திருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோடு பகுதியில், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜூராஜன் மற்றும் கிராமிய காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை சோதனையிட்டனர். சோதனையில், அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.6,000 மதிப்புள்ள 3 கிராம் ‘மெத்தம்பேட்டமைன்’ போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர் விசாரணையில், அவர்கள் குடியாத்தம் மொதீன் பேட்டையைச் சேர்ந்த ஜமால் என்பவரின் மகன் ஆசிம் (27) மற்றும் தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த சதால் என்பவரின் மகன் முபாரக் (29) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 3 கிராம் போதைப்பொருள், செல்போன் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் போது கிராமிய காவல் உதவி ஆய்வாளர் ராஜூ, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முருகன், காவலர் ராமு மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி:
கே.வி. ராஜேந்திரன்,
தாலுக்கா செய்தியாளர், குடியாத்தம்.

 

 

By TN NEWS