Wed. Nov 19th, 2025

உப்பார்பட்டி டோல்கேட் அருகே அரசு பேருந்து பழுதால் பயணிகள் அவதி – பெண் பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக பேருந்து இயக்கம் – தமிழ்நாடு டுடே கோரிக்கை

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து (வாகன எண்: TN 57 N 2588) இன்று உப்பார்பட்டி டோல்கேட் அருகில் திடீரென பழுதடைந்து நடுவழியில் நின்றது. இதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

அந்நேரத்தில், பழுதடைந்த பேருந்தில் இருந்த பயணிகள் மதுரை நோக்கி செல்ல மாற்றுப் பேருந்தில் ஏற ஏற்பாடு செய்யப்பட்டபோது, கம்பத்திலிருந்து தேனி நோக்கி வந்த அரசு பேருந்து (வாகன எண்: TN 57 N 2742) அந்த இடத்தில் நிறுத்தப்பட்டது.

ஆனால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் முழுமையாக நிறுத்தாமல், பெண் பயணிகள் ஏறிக்கொண்டிருக்கும் நிலையிலேயே பேருந்தை இயக்கியதால், பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. சம்பவம் குறித்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கைகள் அரசு போக்குவரத்து துறையின் நம்பகத்தன்மையை பாதிப்பதாகவும், பெண் பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு டுடே நாளிதழ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி தொடர்பாளர்:
அன்பு பிரகாஷ்
தேனி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர்,
தமிழ்நாடு டுடே நாளிதழ்

By TN NEWS