தருமபுரி மாவட்டம், அரூரில் இந்திய குடியரசு கட்சியின் முதுபெரும் தலைவர் பி.வி. கரியமாலின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பி. பழனிசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக சேலம் மண்டல செயலாளர் பழனிசாமி, தொகுப்பாளராக குமரேசன் பணியாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற சபாநாயகருமான செ.கு. தமிழரசன் அவர்கள் பி.வி. கரியமாலின் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மங்கா பிள்ளை, கௌரி சங்கர், பாலகிருஷ்ணன், தன்ராஜ், மோகன், மாரியப்பன், ராமஜெயம், சின்ன அண்ணன், கண்ணன், குமார், மணிவண்ணன், ராம்ஜி, சமூக சமத்துவ படை மாநில செயலாளர் புத்த மணிசாகர், டிஸ் டாக்டர் நெடுமாறன், குமரேசன், தீர்த்தகிரி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் சம்பத் நன்றியை தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய செ.கு. தமிழரசன் அவர்கள் கூறியதாவது:
“மத்திய அரசு வழங்கிய ரூ.8660 கோடி ஆதிதிராவிடர் நல நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. முந்தைய காலங்களில் இத்தகைய நிதிகளை திசைமாற்றி கலர் டிவி திட்டம், உலகத் தமிழ் மாநாடு போன்றவற்றிற்கு செலவிட்டனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான வெற்றிடங்களை நிரப்புவோம் என்றனர். ஆனால் நான்கரை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது சாதி ஆணவக் கொலைக்காக ஆணையம் அமைத்துள்ளனர். ஆனால் அதற்கான காலக்கெடு இல்லை. இது கண்துடைப்பு நடவடிக்கை.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது தாக்குதல்கள் நாளும் தொடர்கின்றன. இவர்களின் உரிமைகள் பறிபோகின்றன. 18 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ளிட ஒதுக்கீடாக 3 சதவீதம் பிரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, பீகார் மாநிலங்களில் போல தமிழகத்திலும் இடஒதுக்கீட்டை 23 சதவீதமாக உயர்த்த வேண்டும்,” எனக் கூறினார்.
பசுபதி, செய்தியாளர்
