மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.
வேலூர், அக்.24:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உழவர் சந்தை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. அவர்கள் சிறப்புரையாற்றி, விவசாயிகளுக்கு இனிப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கினார்.
2000ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அன்றைய தமிழக முதலமைச்சர் மு. க. கலைஞர் அவர்கள் துவக்கிய இந்த உழவர் சந்தை, 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு தற்போது 26ஆம் ஆண்டை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உரையாற்றியபோது கூறியதாவது:
“இந்தியாவிலேயே விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் சந்தை தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. குடியாத்தம் உழவர் சந்தை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தினசரி சுமார் 15 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்து, ரூ.7 முதல் 8 இலட்சம் வரை வர்த்தகம் நடைபெறுவது மகிழ்ச்சியானது,” என்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“விவசாயிகளுக்காக கட்டணமில்லா பேருந்து வசதி, மின்னணு எடை தராசு, குடிநீர் வசதி, குளிர்பதன கிடங்கு ஆகிய அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 550க்கும் மேற்பட்ட விவசாயிகள் அடையாள அட்டையுடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் விவசாயிகளின் கோரிக்கையை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகம் 20 புதிய கடைகள் அமைப்பதற்காக ரூ.26 இலட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.”
“வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் மானியத் திட்டங்கள் உழவர் சந்தை விவசாயிகளுக்கே முன்னுரிமையாக வழங்கப்படும். புதிய உழவர்களை இணைக்க கிராம வாரியாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அமுலு விஜயன், வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயகுமார், நகர்மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் எ.இ. சத்யானந்தம், வட்டாட்சியர் பழனி, விவசாய சங்க பிரதிநிதிகள் எம். சேகர், பழனி வேலன், ஏசி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் நா. சுதாகர் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
