Thu. Nov 20th, 2025

ஆக்கிரமிப்பு அகற்றி சாலை வசதி அமைத்து தரக் கோரி கொட்டும் மலையில் லூர்துபுரம் மக்கள் அரசுக்கு கோரிக்கை.



தர்மபுரி மாவட்டம், அக்டோபர் 21:
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், B. பள்ளிப்பட்டி லூர்துபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் அரசுப் புறம்போக்கு வழியை தடுக்க முயற்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்பகுதி மக்கள் கூறியதாவது:
“எங்கள் வீடுகளுக்கு செல்லும் வழி 123/3 சர்வே எண்ணிலுள்ள அரசுப் புறம்போக்கு நிலம் வழியாக உள்ளது. இதே வழியே பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் என அனைவரும் சுமார் 50 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாதையின் அருகே 121/3 சர்வே எண்ணில் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு, அதில் இரண்டு வாயில்கள் வழியாகவும் நாங்கள் சென்று வந்தோம்,” என தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது:
“எங்கள் ஊரில் பங்கு குழு மக்கள் அனைவரும் ஒன்று கூடி தேர்ந்தெடுக்கும் வழக்கம் 60 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள பங்குத்தந்தை அருள் ஜோதி, சில நபர்களை வைத்து தானே குழுவை அமைத்துள்ளார். மேலும், ஊர் வழித்தடத்தை அடைக்க முயற்சி செய்து வருகிறார். இதனால் நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். போலீசார் வழியை அடைக்கக் கூடாது என அறிவுரை வழங்கியும், மறுநாளே மீண்டும் சுவர் கட்ட முயற்சி மேற்கொண்டார்.”

“இந்த நடவடிக்கைகள் ஊர் கிறிஸ்தவ மக்களுக்குள் ஒற்றுமையை கலைத்து, பிரச்சனைகளை தூண்டும் விதமாக உள்ளது. இந்த வழி அடைக்கப்பட்டால், மெயின் ரோட்டுக்கு செல்ல சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உருவாகும்,” என மக்கள் மிகவும் ஆதங்கத்துடன் கூறினர்.

அவர்கள் மேலும் தெரிவித்தனர்:
“இந்த பிரச்சனையை உடனடியாகத் தீர்த்து, காம்பவுண்ட் சுவரை அகற்றி, பொதுமக்களுக்கு சாலை வசதி நிரந்தரமாக ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மண்டல கண்காணிப்பாளர்
டி. ராஜீவ் காந்தி

By TN NEWS