காவலர் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.10.2025 அன்று அதிகாலை, சாலையின் ஓரத்தில் தனியாக இருந்த சிறுதலைப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகவுண்டர் மகன் ஏழுமலை என்பவரிடம், “நான் காவலர்” என தன்னை அறிமுகப்படுத்தி சோதனை செய்ததாகக் கூறி ரூ. 7,500 பணத்தை பறித்த சம்பவம் நடைபெற்றது.
இது தொடர்பாக மேல்மலையனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன், இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி, செஞ்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் ராஜ் அவர்களின் மேற்பார்வையில், மேல்மலையனூர் காவல் ஆய்வாளர் திருமதி. வினதா, காவல் உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் மற்றும் காவலர்கள் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் சம்பவ இடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததுடன், திருவண்ணாமலை, சேத்பட், ஆரணி, வேலூர் நகரங்களிலும் உள்ள கேமராக்களை சோதனை செய்து, எதிரியை அடையாளம் கண்டனர்.
தொடர்ந்த தேடுதல் நடவடிக்கையில் இன்று, திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் சந்துரு (43) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வழக்கு சொத்து ரூ. 7,500 பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காவலர் பெயரில் மோசடி செய்து பணம் பறித்த நபரை கைது செய்த போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன், இ.கா.ப. அவர்கள் பாராட்டியுள்ளார்.
செய்தி: கே. மாரி – விழுப்புரம் மாவட்டம்
